புத்தாண்டு தினத்தையொட்டி கொண்டாட்டங்கள், கேளிக்கை நிகழ்ச்சிகள் நடத்துவது மற்றும் போக்குவரத்து ஏற்பாடுகள் தொடர்பாக காவல்துறையினரின் அறிவுறுத்தல்களை கோவை மாநகர காவல் துறை வெளியிட்டுள்ளது.
புத்தாண்டு தினத்தையொட்டி கேளிக்கை மற்றும் விருந்துகளுக்கு ஏற்பாடு செய்துள்ள ஹோட்டல்கள், ஷாப்பிங் மால்கள், விடுதிகள் மற்றும் உள்ளரங்குகள் ஆகியவற்றின் நிர்வாகங்கள் அவர்கள் நடத்தும் நிகழ்ச்சிகள் தொடர்பான விஷயங்களில் சட்டம் ஒழுங்கு பிரச்சனை ஏற்படாவண்ணம் இருக்கத் தேவையான அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் மேற்கொள்ளவேண்டும் என கோவை மாநகர காவல்துறை சார்பாக அறிவுறுத்தப்படுகிறது.
ஹோட்டல்கள் ஷாப்பிங் மால்கள், விடுதிகள் மற்றும் உள்ளரங்குகளுக்கு வரும் வாகனப்போக்குவரத்தை ஒழுங்கு படுத்தவும் நிகழ்ச்சிகளில் பங்கேற்போர் மற்றும் அவர்களது சொத்துக்களின் பாதுகாப்பை உறுதிசெய்யவும் சம்மந்தப்பட்ட நிர்வாகத்தினர் தகுந்த பாதுகாப்பு காவலர்களை (Security Guard) நியமிக்க வேண்டும். அதேபோன்று கேளிக்கை விருந்துகளுக்கு வருபவர்களின் வாகனங்களை நிறுத்துவதற்கு (Parking) சிறப்பு ஏற்பாடுகள் செய்து போக்குவரத்து நெரிசல் இன்றி பார்த்துக்கொள்ள வேண்டும்.
புத்தாண்டு தினத்தின்போது தங்கள் நிர்வாகத்திற்குட்பட்ட இடங்கள் மற்றும் கட்டிடங்களில் ஏதேனும் சந்தேகத்திற்கிடமான பொருட்கள் விசயங்கள் அல்லது சந்தேகத்திற்குரியவர்கள் நடமாட்டம் குறித்து தெரியவந்தால் உடனடியாக அதுகுறித்த தகவலை காவல்துறைக்கு தெரிவிக்க வேண்டும்.
புத்தாண்டு விருந்துகளின்போது மது அருந்திவிட்டு வாகனம் இயக்குவதை தடுக்கத் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை சம்மந்தப்பட்ட நிகழ்ச்சிகளின் ஏற்பாட்டாளர்கள் மற்றும் நிர்வாகத்தினர் மேற்கொள்ள வேண்டும்.
தேவைப்படும் பட்சத்தில், புத்தாண்டு கொண்டாட்ட நிகழ்ச்சிக்கு வரும் விருந்தினர் ஒருவர் அவரது வீட்டிற்கு பாதுகாப்புடன் செல்வதற்கு தேவையான ஓட்டுநருடன் கூடிய (மாற்று) வாகனத்தை ஏற்பாடு செய்து தரவேண்டியது சம்மந்தப்பட்ட நிர்வாகத்தின் பொறுப்பாகும்.
புத்தாண்டு தின கேளிக்கைகளுக்கு ஏற்பாடு செய்துள்ள நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் தங்களது நிறுவனத்தில் பணிபுரியும் பெண் ஊழியர்களை பணி முடிந்ததும் அவர்களின் வீட்டிற்கு அவர்களை பாதுகாப்பாக அனுப்புவதற்கு தேவையான வாகன வசதிகள் ஏற்பாடு செய்து தரவேண்டும்.
அனைத்து ஹோட்டல்கள், கேளிக்கை அரங்குகள் மற்றும் தங்கும் விடுதிகளில் நிறுவப்பட்டுள்ள CCTV கேமராக்களின் செயல்பாடுகளை பரிசோதித்து அவைகள் முழுமையாக இயங்குவதையும், CCTV கேமராக்கள் பதிவுகள் முழுமையாக பாதுகாக்கப்பட்டு சேமித்து வைக்கப்படுவதையும் சம்மந்தப்பட்ட நிர்வாகத்தினர் உறுதி செய்ய வேண்டும். காவல்துறையினர் கோரும் பட்சத்தில் CCTV கேமர பதிவுகள் காவல்துறை வசம் ஒப்புவிக்கப்பட வேண்டும்.
ஷாப்பிங் மால்கள், உள்ளரங்கு பொழுதுபோக்கு இடங்கள், ஹோட்டல் மற்றும் விடுதி நிர்வாகங்களால் நடத்தப்படும் புத்தாண்டு தின கொண்டாட்ட நிகழ்ச்சிகளுக்கு அனுமதிக்கப்பட்ட எண்ணிக்கைகளுக்கு மேலாக அனுமதிச் சீட்டோ அல்லது கூப்பன்களோ வழங்குதல் கூடாது.
ஹோட்டல்கள், ஷாப்பிங் மால்கள், விடுதிகள் மற்றும் உள்ளரங்களில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள புத்தாண்டு விருந்து கொண்டாட்டங்களின் போது அநாகரிகமாவும், ஆபாசத்தன்மையுடனும் கூடிய நிகழ்ச்சிகள் ஏதும் நடைபெறாமல் இருக்க தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை நிர்வாகத்தினர் மேற்கொள்ளவேண்டும்.
புத்தாண்டு கொண்டாட்ட நிகழ்ச்சிகளில் பங்கேற்பவர்கள் சட்டவிரோதமாக போதைப்பொருட்களை உபயோகிக்காமல் இருப்பதை சம்மத்தப்பட்ட நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் மற்றும் ஹோட்டல் / விடுதி நிர்வாகத்தினர் உறுதி செய்யவேண்டும். மேலும் இதுகுறித்து தக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். அவ்வாறு நிர்வாகம் தடுக்க தவறி அதன் மூலமாக சட்டம் ஒழுங்கு பிரச்சனை ஏற்பட்டால் சம்மந்தப்பட்ட நிர்வாகத்தின் மீது நடவடிக்கை எடுக்கப்படும்.
புத்தாண்டு தினத்தின்போது போக்குவரத்து விதிமீறல்களை தடுப்பதற்காக போக்குவரத்து மற்றும் உள்ளூர் காவல்துறையினர் இணைந்து நகரம் முழுவதும் வாகனத் தணிக்கையில் ஈடுபடவுள்ளார்கள்.
மதுஅருந்திவிட்டு பிரச்சனையை ஏற்படுத்துபவர்கள், போக்குவரத்து விதிமீறல்களில் ஈடுபவர்கள் குறிப்பாக மதுபோதையில் வாகனம் ஓட்டுபவர்கள் வாகனப் பந்தயத்தில் (Racing) ஈடுபடுபவர்கள். இருசக்கர வாகனங்களில் சைலன்சர்களை நீக்கிவிட்டு அதிக சத்தத்துடனும், ஒலிப்பான்களை ஒலிக்கச்செய்துகொண்டும் வாகனம் ஓட்டுபவர்கள் பொதுமக்கள் நடமாட்டத்திற்கும், வாகனப்போக்குவரத்திற்கும் இடையூறு செய்யும் விதமாக அதிவேகமாகவும் அஜக்கிரதையாகவும் வாகனம் ஓட்டுபவர்கள் ஆகியோர் மீது உரிய சட்டப்பிரிவுகளின் கீழ் நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.
(கூடுதல் தகவல் விரைவில்)