கோவை மாநகரில் திருச்சி சாலை சுங்கம் ரவுண்டானா முதல் ராமநாதபுரம் சந்திப்பு வரையிலான சுமார் 1.5 கி.மீட்டர் நீளத்திற்கு மையத்தடுப்புகளில் சாலையினை அழகுபடுத்தும் வகையில் தனியார் பங்களிப்புடன் (ஜெம் மருத்துவமனை) செடிகள் நடப்பட்டு, பராமரிக்கப்படவுள்ளது.

மேலும், திருச்சி சாலை அல்வேனியா பள்ளி அருகில் உள்ள பாலம் முடியும் வரையில் மையத்தடுப்பு பகுதிகளிலும் செடிகள் நடப்படவுள்ளது. தற்போது கோவை அவிநாசி சாலையில் உருவாகி வரும் புது மேம்பாலத்தின் மையத்தடுப்புகளிலும் இதுபோல செடிகள் நட்டு அழகு படுத்த கட்டமைப்புகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த ஆண்டு தனியார் பங்களிப்புடன் மாநகராட்சிக்கு உட்பட்ட ரேஸ் கோர்ஸ் சாலை உள்ளிட்ட பல இடங்களில் சிலைகள் அமைக்கப்பட்டுள்ளது. மாவட்ட ஆட்சியர் அலுவலக பகுதியில் தீவுத்திடல் புதுப்பிக்கப்பட்டுள்ளது. இதேபோல இந்த ஆண்டும் மாநகராட்சிக்கு உட்பட்ட சுமார் 10 க்கும் மேற்பட்ட இடங்களில் சாலை தீவுத்திடல் அமைப்பதற்கு உத்தேசிக்கப்பட்டுள்ளது.

வாலாங்குளத்தில் ...

சில காலமாக கோவை வாலாங்குளத்தில் ஆகாயத்தாமரைகள் படர்ந்துள்ளது செய்திகளில் தொடர்ச்சியாக வெளிவந்துகொண்டிருந்த நிலையில், இன்று வாலாங்குளத்தில் ஆகாயத்தாமரைகளை அகற்றும் பணிகள் மாநகராட்சியின் சார்பில் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.