MY V3 ADS எனும் செயலி மூலம் வீடியோ விளம்பரங்கள் பார்த்தால் காசு கிடைக்கும் எனவும் இதில் உறுப்பினர் ஆவோருக்கு அதிக லாபம் கிடைக்கும் எனவும் அதை பிரபல படுத்தி அந்த நிறுவனத்தை நடத்தி வந்த கோவை மாவட்டத்தை சேர்ந்த சக்தி ஆனந்தன் மீதும் அந்த நிறுவனத்தின் மீதும் கடந்த ஜனவரி மாதத்தில் பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் கோவை மாநகர காவல் துறையினரிடம் புகாரளிக்கப்பட்டது.

மக்களிடம் MY V3 ADS பணமோசடி செய்துவருவதாக புகாரளிக்கப்பட்டு, அதன் மீது விரைந்து நடவடிக்கை எடுக்கவேண்டும் எனவும் வேண்டுகோள் விடுக்கப்பட்டது. இந்த வழக்கை கோவை சைபர் குற்றப்பிரிவு போலீசார் விசாரித்து வந்த நிலையில் அது சென்னை பொருளாதார குற்றப்பிரிவுக்கு மாற்றப்பட்டது. 

இந்நிலையில் MY V3 ADS உரிமையாளர் சக்தி ஆனந்தன் முன் ஜாமீன் கேட்டு நீதிமன்றத்தில் மனுவை சமர்பித்திருந்தார். அந்த மனுவை நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. மேலும் சக்தி ஆனந்தனை நிதி நிறுவன மோசடி வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்தில் சரணடைய உத்தரவிட்டிருந்தது. 

அதையடுத்து, இந்த நீதிமன்றத்தின் நீதிபதி மலர் வாலண்டீனா முன்னிலையில் இன்று சரணடைந்தார். அவருக்கு ஜூலை 19 ஆம் தேதி வரை நீதிமன்ற காவலில் அடைக்க நீதிபதி உத்தரவிட்டுள்ளார். 

ஜாமீன் கோரியும் ஜெயிலில் முதல் வகுப்பு வேண்டுமென்றும் சக்தி அனந்தன் தரப்பில் மனு சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. இதன் மீதான விசாரணை ஜூலை 9 ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.