கோவை நீதிமன்ற வளாகம் வெளியே இன்று காலை கோவை பார் அசோசியேசன் சார்பில் வழக்கறிஞர்கள் மத்திய அரசின் வழக்கறிஞர்கள் சட்ட திருத்த வரைவு மசோதா 2025க்கு எதிர்ப்பு தெரிவித்து அமைதி வழியில் ஆர்ப்பாட்டம் செய்தனர்.

வழக்கறிஞர் தொழிலுக்கு பல்வேறு பாதிப்புகளை ஏற்படுத்தும் வகையில் உள்ளதாக மத்திய அரசின் வழக்கறிஞர்கள் சட்ட திருத்த வரைவு மசோதாவிற்கு கோவை உள்பட நாடு முழுவதும் கடும் எதிர்ப்பு எழுந்து உள்ளது.

தற்போது நடைமுறையில் உள்ள 'வழக்கறிஞர்கள் சட்டம், 1961'ல் சட்ட விவகாரத் துறை பல திருத்தங்களை முன்மொழிந்து, வழக்கறிஞர்கள் வரைவு (திருத்தம்) மசோதா, 2025ஐ மத்திய அரசு சமீபத்தில் வெளியிட்டது. இது பற்றிய பொதுமக்களின் கருத்துகளை வரவேற்பதாக சட்ட விவகாரங்கள் துறை தனது இணையதளத்தில் அறிவிப்பு வெளியிட்டது. 

அகில இந்திய பார் கவுன்சில், மாநில பார் கவுன்சில்கள், உச்ச நீதி மன்ற பார் அசோசியேஷன்கள், வழக்கறிஞர் சங்கங்கள் மற்றும் அனைத்து மாநிலங்களிலும் உள்ள பார் அசோசியேஷன்கள், இந்த வழக்கறிஞர்கள் வரைவு (திருத்தம்) மசோதா, 2025-ன் மீதான தங்கள் கருத்துக்களை தெரிவிக்க அறிவுறுத்தப்பட்டனர்.

இந்த மசோதாவிற்கு தொடக்க நிலையில் இருந்தே வழக்கறிஞர்கள் கடும் எதிர்வினை ஆற்றி உள்ளனர் என தகவல்கள் உள்ளன. வரைவு மசோதா வழக்கறிஞர்கள் தொழிலுக்கு நேரடியாக பல்வேறு பாதிப்புகள் ஏற்படுத்தும் விதமாக இருப்பதாகவும் வழக்கறிஞர்கள் குற்றம்சாட்டுகின்றனர். அதன்படி வழக்கறிஞர்கள் தொடர் நீதிமன்ற புறக்கணிப்பு போராட்டத்திற்கு தடைவிதிக்கும் புதிய விதி வரைவு மசோதாவில் உள்ளதாக கூறுகின்றனர்.

தன்னாட்சி அமைப்பாக உள்ள பார் கவுன்சில் மத்திய அரசின் உத்தரவுகளை கட்டாயம் நிறைவேற்ற வேண்டும் என்ற நெருக்கடி வரும்,  வழக்கறிஞர்கள் மீது முதல் தகவல் அறிக்கை பதிவு செய்தாலே பார் கவுன்சில் தேர்தலில் போட்டியிட முடியாத நிலை உருவாகும், மத்திய அரசு பரிந்துரைக்கும் மூன்று வழக்கறிஞர்களை பார் கவுன்சிலில் இணைக்க வேண்டும் என்பது போன்ற பல்வேறு விதிகள் இந்த மசோதாவில் உள்ளது என கூறும் வழக்கறிஞர்கள், இந்த சட்ட திருத்தம் வந்தால் அதன் மூலம் தன்னாட்சி அமைப்பான பார்க்க கவுன்சில் மீது மத்திய அரசு அதிகாரம் செலுத்த முயற்சிக்கும் என்று குற்றம் சாட்டுகின்றனர்.

இந்த மசோதாவை ஓரமாக வைத்து விட்டு, வழக்கறிஞர்களின் நலனை பாதுகாக்கும் வகையில் வழக்கறிஞர்கள்  பாதுகாப்பு சட்டத்தை மத்திய மாநில அரசுகள் உடனடியாக நிறைவேற்றித் தர வேண்டும் என கோவையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட 50க்கும் மேற்பட்டோர் கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்களை எழுப்பினர்.