மீண்டும் கோவைக்கு சிறுவாணி அணையிலிருந்து வழங்கும் நீரை குறைத்ததா கேரளா அரசு? சட்டப்பேரவையில் போட்டுடைத்த எஸ்.பி. வேலுமணி
- by David
- Mar 18,2025
கேரள மாநிலத்தில் அமைந்துள்ளது சிறுவாணி அணை. கோவைக்கு முக்கிய நீராதாரமாக இது உள்ளது. இந்த அணையிலிருந்து தினமும் சுமார் 100 மில்லியன் (10 கோடி) லிட்டர் தண்ணீர் வழங்கப்படவேண்டும். அவ்வாறு வழங்கப்படும் நீர் கோவை மாநகராட்சியின் 32 வார்டுகளுக்கும் 7 பேரூராட்சிகள், 10 ஊராட்சிகள் உள்பட 28 கிராமங்களுக்கும் பகிரப்படுகிறது.
சமீப காலமாக சிறுவாணி அணையிலிருந்து கோவை மாநகராட்சிக்கு பொதுமக்கள் பயன்பாட்டிற்கு நாள் ஒன்றுக்கு 77 மில்லியன் (7.7 கோடி) லிட்டர் நீர் வழங்கப்பட்டுள்ளது. ஆனால் அவ்வாறு 2025 ஜனவரி மாதம் வரை வழங்கப்பட்ட அளவு தற்போது குறைக்கப்பட்டுள்ளது என கோவை தொண்டாமுத்தூர் சட்டமன்ற உறுப்பினர் SP வேலுமணி இன்று சட்டப்பேரவையில் தெரிவித்தார்.
இது பற்றி அவர் இன்று மேலும் கூறுகையில், தற்போது இந்த அணையிலுருந்து நாள் ஒன்றுக்கு 47 மில்லியன் (4.7 கோடி) லிட்டர் நீர் தான் வழங்கப்படுகிறது. 30 மில்லியன் (3 கோடி) லிட்டர் குடிநீரை கேரளா அரசு குறைத்துள்ளது எனவும் கோவையின் கிராம பஞ்சாயத்திற்கு (10 ஊராட்சி, 7 பேரூராட்சி) 18 மில்லியன் (1.8 கோடி) லிட்டர் நீர் வழங்கப்பட்டு வந்தது அதில் 6 மில்லியன் (60 லட்சம்) லிட்டர் குறைக்கப்பட்டு 12 மில்லியன் (1.2 கோடி) லிட்டர் நீர் மட்டுமே வழங்கப்படுகிறது எனவும் கூறினார்.
தமிழக குடிநீர் வடிகால் வாரியத்தில் இருந்து கேரளா அரசுக்கு ரூ.13 கோடி தொகை கட்ட வேண்டும் ஆனால் இதுவரை ரூ.6 கோடி மட்டுமே கட்டப்பட்டுள்ளது. மீத தொகையை காட்டாத காரணத்தால் வழக்கமாக அணையிலிருந்து வழங்கப்படும் குடிநீர் அளவு குறைக்கப்பட்டுள்ளதாக தகவல் உள்ளதாக அவர் சட்டப்பேரவையில் கூறினார்.
இதனால் கோவை மக்கள் மிகவும் பாதிக்கப்பட்டு வருகின்றனர் என்று கூறிய அவர், தமிழக அரசு நிலுவையில் உள்ள தொகையை செலுத்தியோ அல்லது பேச்சுவார்த்தை மூலமாகவோ உடனடியாக கோவை மாநகராட்சிக்கு முழுமையாக 77 மில்லியன் (7.7 கோடி) லிட்டர் நீரையும், கிராமப்பகுதிகளுக்கு 18 மில்லியன் (1.8 கோடி) லிட்டர் குடிநீரை வழங்க அரசு நடவடிக்கை எடுக்கவேண்டும் என கேட்டுக்கொண்டார்.
இதற்கு பதிலளித்த தமிழக நகராட்சி நிர்வாக துறை மற்றும் குடிநீர் வழங்கல் துறை அமைச்சர் KN நேரு, கோவைக்கு பில்லூர் I, II, III மற்றும் சிறுவாணி குடிநீர் திட்டங்கள் மூலம் 380 எம்.எல்.டி க்கும் மேலாக கோவைக்கு நீர் வழங்கப்பட்டு வருகிறது. தண்ணீர் தட்டுப்பாடு என்பது இல்லை. தேவையான தண்ணீர் உள்ளது. சட்டமன்ற உறுப்பினர் SP வேலுமணி கூறிய செய்தி பற்றி தனக்கு தெரியவில்லை ஆனால் இது குறித்து நடவடிக்கை எடுக்கப்படும் என கூறினார்.