கோவை கொடிசியா வளாகத்தில் கோயம்புத்தூர் புத்தகத் திருவிழா வரும் வெள்ளி ஜூலை 19ஆம் தேதி துவங்க இருக்கிறது.

இது பற்றிய செய்தியாளர் சந்திப்பு இன்று கோவை ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்றது. கோவை மாவட்ட ஆட்சியர் கிராந்தி குமார் செய்தியாளர்களை சந்தித்தார்.இதில் கோயம்புத்தூர் புத்தகத் திருவிழா 2024 இன் தலைவர் ரமேஷ் மற்றும் குழுவினர் கலந்து கொண்டனர்.

ஜூலை 19ஆம் தேதி முதல் 28ஆம் தேதி வரை பத்து நாட்களுக்கு காலை 11:00 மணி முதல் மாலை 8 மணி வரை லட்சக்கணக்கான புத்தகங்கள் பொதுமக்கள் கண்காட்சிக்கு வைக்கப்படும்.

கோவை மாவட்ட நிர்வாகம் மற்றும் கொடிசியா இணைந்து நடத்தும் இந்த புத்தகத் திருவிழாவை வெள்ளிக்கிழமை மாலை 6 மணிக்கு தமிழக வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறை அமைச்சர் முத்துசாமி துவக்கி வைக்க இருக்கிறார். புத்தக கண்காட்சியுடன் இந்த 10 நாளும் வெவ்வேறு நிகழ்ச்சிகள் நடைபெறுகிறது.

20ம் தேதி காலை 11 மணிக்கு கோவை கலாலயம் நாடக குழுவின் 'சொர்க்கம் நம் கையில்' எனும் சமூக நாடகம் நடைபெறும். 21 ஆம் தேதி காலை 11 மணிக்கு 'அவள் கை எழுதுகோல்' எனும் கவியரங்கம் கவிஞர் உமா மோகன் தலைமையில் நடைபெறும். அன்று மாலை 6:30 மணிக்கு இசையமைப்பாளர் ஜேம்ஸ் வசந்தனின் குழுவினர் நடத்தும் 'இன்னிசையில் சங்கத்தமிழ் பாடல்கள்' நிகழ்ச்சி நடைபெறும்.

22 ஆம் தேதி மாலை 6 மணிக்கு எழுத்தாளர் பவா.செல்லத்துறையின் 'பெருங்கதையாடல்' நிகழ்ச்சி நடைபெறும். இதுபோல பல்வேறு நிகழ்ச்சிகள் இந்த 10 நாட்களும் புத்தக கண்காட்சியை ஒட்டி நடைபெற்று வரும்.  புத்தக கண்காட்சியில் கலந்து கொள்ள அனுமதி இலவசம்.

இந்த ஆண்டு புத்தக திருவிழாவில் 285 அரங்குகள் அமைக்கப்பட உள்ளதாகவும் பல்வேறு மாநிலங்களில் இருந்து பதிப்பாளர்கள் வருகை புரிய உள்ளதாக தெரிவிக்கப்பட்டது. இதில் அனைத்து வயதினர்களுக்கான புத்தகங்களும் இடம்பெறும். 

கடந்த ஆண்டு நடைபெற்ற புத்தக திருவிழாவில் ரூ.2 கோடி அளவிற்கு விற்பனை நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.