கோவை மாவட்டம் கருமத்தம்பட்டியில் இன்று சனிக்கிழமை (மார்ச் 11) "விசைத்தறிகளுக்கு மின் கட்டண சலுகை வழங்கிய தமிழ்நாடு முதலமைச்சருக்கு நன்றியும் பாராட்டும்" என்ற தலைப்பில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்களுக்கு பாராட்டு விழா நடந்தது.

விசைத்தறிகளுக்கு ஏற்கனவே உள்ள 750 யூனிட்டில் இருந்து கூடுதலாக 250 யூனிட் அதிகப்படுத்தி மார்ச் 1ம் தேதி முதல் மொத்தமாக 1000 யூனிட் இலவச மின்சாரம் வழங்கப்படும் என அரசு தெரிவித்துள்ளது.  

இதனால் 2,37,347 நெசவாளர்களின் வாழ்வில் முதலமைச்சர் ஸ்டாலின் விளக்கேற்றியுள்ளார் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. 

எனவே முதலமைச்சர் ஸ்டாலினுக்கு இந்த பாராட்டு விழாவை தமிழ்நாடு விசைத்தறி சங்கங்களின் கூட்டமைப்பினர் நடத்தினர். 

நிகழ்வில், நெசவாளர்களின் கோரிக்கைகள் எல்லாம் படிப்படியாக நிறைவேற்றப்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறினார்.

அத்துடன் மாநிலமெங்கும் ஜவுளிப் பூங்காக்கள் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும். அதன்படி மேற்கு மண்டலத்தில் ஜவுளிப்பூங்கா அமைக்கப்படும் என்றும் அவர் கூறினார். 

 

இந்த பாராட்டு விழாவில், மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி, தமிழக கைத்தறித் துறை அமைச்சர் காந்தி மற்றும் ஈரோடு கிழக்கு சட்டமன்றத் தொகுதியின் சட்டமன்ற உறுப்பினர் ஈ.வி.கே.எஸ் இளங்கோவன் கலந்துகொண்டனர்.