கோவை வந்தார் முதலமைச்சர் ஸ்டாலின்...தார் சாலை அமைக்கப்பட்டு வருவதை ஆய்வு செய்தார்!
- by admin
- Sep 24,2023
திருப்பூர் மாவட்டத்தில் நடக்கவிருக்கும் திமுகவின் பூத் முகவர்கள் கூட்டத்தில் பங்கேற்பதற்காக இன்று தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் சென்னையிலிருந்து கோவை விமான நிலையம் வந்தடைந்தார்.
திமுகவின் கோவை மண்டல அளவிலான பூத்முகவர்கள் கூட்டம் தமிழக முதலமைச்சர் மு.க ஸ்டாலின் தலைமையில் திருப்பூர் மாவட்டம் காங்கேயம் படியூரில் இன்று மாலை நடைபெறுகிறது.இதற்காக தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் சென்னையிலிருந்து விமானம் மூலமாக கோவை விமான நிலையம் வந்தடைந்தார்.
தமிழக ஏடிஜிபி அருண், மாவட்ட ஆட்சியர் கிராந்திகுமார் பாடி,உளவுத்துறை ஐஜி செந்தில் வேலவன், மேற்கு மண்டல ஐஜி பவானிஸ்வரி, மாநகராட்சி ஆணையர் பிரதாப்,மேயர் கல்பனா ஆனந்தகுமார், மாநகர காவல் ஆணையர் பாலகிருஷ்ணன், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பத்ரி நாராயணன்,மற்றும் கட்சி நிர்வாகிகள் ஆகியோர் விமான நிலையத்தில் முதலமைச்சரை வரவேற்றனர்.
தொடர்ந்து விமான நிலையத்திலிருந்து கார் மூலம் கோவை நீலாம்பூர் பகுதியில் உள்ள லீ மெரிடியன் நட்சத்திர ஓட்டலுக்கு செல்கிறார். அங்கு சிறிது நேரம் ஓய்விற்கு பின்பு திருப்பூர் மாவட்டத்திற்கு செல்கிறார்.
கட்சி நிகழ்ச்சிகளை முடித்துவிட்டு மீண்டும் கார் மூலம் கோவை விமான நிலையம் வரும் முதல்வர் இரவு 8-50 விமானத்தில் சென்னை திரும்புகிறார்.முதலமைச்சர் வருகையொட்டி கோவை திருப்பூர் மாவட்டங்களில் 1000க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.கோவை விமான நிலையத்தில் திமுக தொண்டர்களும் அவருக்கு வரவேற்பு அளித்தனர்.
தமிழகத்தில் உள்ள சாலைகளை ஆய்வு செய்வேன் என முதலமைச்சர் சொன்னது போல இன்று கோவை வந்தபோது கோவை மாநகராட்சிக்குட்பட்ட வார்டு எண்:8, துளசி நகரில் ரூ.1.62 கோடி மதிப்பீட்டில் 2.04 கி.மீ நீளத்திற்கு அமைக்கப்பட்டு வரும் தார் சாலை பணியினை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
அவர் உடன் நீர்வளத் துறை அமைச்சர் துரைமுருகன், நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் கே.என்.நேரு, உயர்கல்வித் துறை அமைச்சர் முனைவர் க.பொன்முடி இருந்தனர்.