2024ன் இறுதி நாள் நாளை. புத்தாண்டு இரவில் சாலை பாதுகாப்பை பலப்படுத்த கோவை மாநகர காவல் துறை பல்வேறு நடவடிக்கைகளை எடுக்கவுள்ளது.
இது பற்றி மாநகர காவல் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:-
கோவை மாநகரில் வாகனப் போக்குவரத்தை கண்காணிக்கவும், விபத்துக்களை தடுக்கும் விதமாகவும் மற்றும் போக்குவரத்தை ஒழுங்குபடுத்துவதற்காகவும் 35 இடங்கள் கண்டறியப்பட்டு அங்கு சட்டம் ஒழுங்கு காவல்துறை குழுக்கள் மூலம் வாகனத் தணிக்கை செய்யப்படவுள்ளன. அதே போன்று போக்குவரத்து காவல் துறை சார்பாக 35 இடங்கள் கண்டறியப்பட்டு அங்கு போக்குவரத்து காவல்துறையினர் மூலம் வாகனத் தணிக்கை செய்யப்படவுள்ளன.
கோவை மாநகரில் உள்ள அனைத்து மேம்பாலங்களிலும் 31.12.2024-ஆம் தேதி இரவு புத்தாண்டு தினத்தன்று போக்குவரத்து தடைசெய்யப்பட்டுள்ளது.
வாகன விபத்து உள்ளிட்ட அசம்பாவித சம்பவங்களில் பாதிக்கப்பட்டோரை மீட்க நகரின் முக்கிய இடங்களாகிய அவிநாசி செல்லும் சாலையிலுள்ள அண்ணா சிலை, கொடிசியா சந்திப்பு, ஆர்.எஸ்.புரத்தில் D.B.ரோட்டில் தலைமை தபால் நிலையம் அருகில் மற்றும் உக்கடம் ஆத்துப்பாலம் சந்திப்பு ஆகிய இடங்களில் ஆம்புலன்ஸ் வாகனங்கள் நிறுத்தப்படும்.
மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டுவது மோட்டார் வாகனச் சட்டப்பிரிவு 185 படி தண்டிக்கத்தக்க குற்றமாகும். போக்குவரத்து காவல்துறையினர் சர்பாகஅனுமதிக்கப்பட்ட வரையரைக்கு மேலாக மது அருந்திவிட்டு வாகனம் இயக்குபவர்களை Breath Analyser மூலம் கண்டறிந்து தக்க சட்டப்பூர்வ நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். அவர்களது வாகனங்கள் பறிமுதல் செய்யப்படுவதோடு அவர்களது ஓட்டுநர் உரிமத்தை இரத்து செய்வதற்கான நடவடிக்கைகளும் எடுக்கப்படும்.
காவல்துறை நடவடிக்கைக்குள்ளான நபர் புத்தாண்டு தினத்தையடுத்த வேலைநாளில் அவரது வாகனம் தொடர்பான ஆவணங்கள் மற்றும் ஓட்டுநர் உரிமம் ஆகியவற்றுடன் காவல்நிலையத்தில் ஆஜராக வேண்டும். காவல்துறை வாயிலாக பெறப்படும் அழைப்பாணையைப் பெற்று சம்மந்தப்பட்ட நீதிமன்றத்தில் அவரது வழக்கை முடித்துக்கொள்ளவேண்டும்.
வெளியூரில் இருந்து கோவை மாநகருக்குள் நுழையும் எல்லைகளில் 11 இடங்களில் எல்லைப்புற வாகனச் சோதனைச் சாவடிகளில் 24 மணிநேரமும் வாகனத் தணிக்கை தொடரப்பட்டு நகரினுள் நுழையும் அனைத்து வாகனங்கள் மற்றும் அதில் பயணிக்கும் வெளியாட்கள் கண்காணிக்கப்படவுள்ளார்கள்.
புத்தாண்டை முன்னிட்டு சாலை விபத்துகளை தடுக்க, போக்குவரத்தை ஒழுங்குபடுத்த மாநகர காவல் துறை நடவடிக்கை!
- by David
- Dec 30,2024