கோவையில் நடைபெற்ற கிறிஸ்துமஸ் பாடல் பாடும் போட்டியில் கோவை, ஈரோடு மற்றும் நீலகிரி மாவட்டங்களை சேர்ந்த மாணவர்கள் குழுவாக இணைந்து அருமையாக பாடல் பாடி அசத்தினர்.

கோவையை சேர்ந்த விஸ்டீரியா குளோபல் நிறுவனம் சார்பில் கிறிஸ்துமஸ் பண்டிகை வருவதை முன்னிட்டு பள்ளி மாணவர்களுக்கான கிறிஸ்துமஸ் பாடல் பாடும் போட்டியை ஒருங்கிணைத்து உள்ளனர். 

இந்த போட்டிக்கான தேர்வு கோவை நிர்மலா மகளிர் கல்லூரியில் அண்மையில் நடைபெற்றது. கோவை, நீலகிரி மற்றும் ஈரோடு மாவட்டங்களை சேர்ந்த 18 பள்ளிகளை சேர்ந்த மாணவர்கள் இந்த போட்டியில் கலந்து கொண்டனர்.

கீபோர்ட், டிரம்ஸ், கித்தார் உள்ளிட்ட வெவ்வேறு இசைக்கருவிகளை இசைத்தவாறு கிறிஸ்துமஸ் பாடல்களை பாடி அசத்தினர். இதில் தேர்வு செய்யப்படும் மாணவர்கள் வரும் டிசம்பர் மாதம் 9ம் தேதி நடைபெறும் இறுதி போட்டியில் கலந்து கொள்கின்றனர். இந்த இறுதி போட்டியில் வெற்றி பெறும் மாணவர்களுக்கு ரொக்கப் பரிசுகள் வழங்கப்பட உள்ளது.

இதுகுறித்து விஸ்டீரியா குளோபல் நிறுவனத்தை சேர்ந்த ஷோபா சேஷல் கூறுகையில், "பள்ளி மாணவர்களுக்கும், கல்லூரி மாணவர்களுக்கும், தனியார் நிறுவனத்தில் பணியாற்றும் பணியாளர்கள் மத்தியிலும் இந்த போட்டி நடத்தப்படுகிறது. இந்த ஆண்டு கோவை மண்டலத்தில் இருந்து 40 அணிகள் கலந்து கொள்கின்றன. கிறிஸ்துமஸ் என்றாலே அன்பை பகிர்ந்து கொள்ளுதல் என்பது தான் பொருள். இந்த அன்பை பாடல் வடிவில் குழுவாக அருமையாக பாடுவோர்க்கு பரிசுகளை வழங்க உள்ளோம். முதல் பரிசாக ரூ.25 ஆயிரமும், இரண்டாம் பரிசாக ரூ.15 ஆயிரமும் மூன்றாம் பரிசாக ரூ.5 ஆயிரமும் வழங்கப்பட உள்ளது." என்றார்.