சித்திரைக்கனி திருவிழாவை முன்னிட்டு கோவை உக்கடம் பகுதியில் பல்வேறு வகையான பழங்கள் குவிந்து வருகின்றன. இப்பகுதி பழ வியாபாரிகளால் நிரம்பி வழிவதுடன், பொதுமக்கள் ஆர்வத்துடன் பழங்களை வாங்கிச் செல்கின்றனர்.

தமிழ் புத்தாண்டின் முதல் நாளில் கடைபிடிக்கப்படும் கனி காணுதல் நிகழ்வை சித்திரை கனி என்றும் அழைப்பார்கள்.சித்திரைக்கனி திருவிழா என்பது தமிழ்நாட்டில் கொண்டாடப்படும் ஒரு முக்கியமான திருவிழா ஆகும். இது பொதுவாக சித்திரை மாதத்தின் முதல் நாளில் கொண்டாடப்படுகிறது.

இந்த திருவிழா வசந்த காலத்தின் தொடக்கத்தையும், தமிழ் புத்தாண்டையும் குறிக்கிறது.இந்த திருவிழாவின் மிக முக்கியமான அம்சம் கனி காணுதல் ஆகும். அன்று காலையில், மக்கள் பல்வேறு வகையான பழங்கள், காய்கறிகள், பூக்கள், நாணயங்கள் மற்றும் தங்கம் போன்ற மங்களகரமான பொருட்களை ஒரு தட்டில் அல்லது கூடையில் அடுக்கி வைத்து வழிபடுவார்கள். இது அந்த ஆண்டு முழுவதும் செழிப்பு மற்றும் அதிர்ஷ்டத்தை தரும் என்று நம்பப்படுகிறது. இதனை கருத்தில் கொண்டு, கோவை மற்றும் அதன் சுற்று வட்டாரப் பகுதிகளில் இருந்து ஏராளமான வியாபாரிகள் உக்கடம் பகுதிக்கு பல்வேறு வகையான புதிய மற்றும் தரமான பழங்களை விற்பனைக்காக கொண்டு வந்து உள்ளனர். மாம்பழம், பலாப்பழம், திராட்சை, வாழைப்பழம், ஆரஞ்சு, சாத்துக்குடி, தர்பூசணி, கிர்ணிப்பழம், பப்பாளி, அன்னாசி, கொய்யா என அனைத்து விதமான பழங்களும் இங்கு விற்பனைக்கு உள்ளன. மேலும், மலைப் பகுதிகளில் விளையும் அரிய வகை பழங்களான நாவல் பழம், இலந்தை பழம் போன்றவையும் விற்பனைக்கு வந்து உள்ளதால் பொதுமக்கள் மகிழ்ச்சியுடன் வாங்கிச் செல்கின்றனர்.

Credits: Thangappa/Media7