கோவையில் தங்க நகை தயாரிப்பு கூடங்களுக்கு இன்று மாலை 5:45 மணி அளவில் நேரில் சென்று முதலமைச்சர் ஆய்வு செய்தார்.

கோவையில் பொற்கோளர்கள் அதிகம் வசிக்கும் கெம்பட்டி காலனி பகுதியில் இந்த ஆய்வு நடைபெற்றது. அப்போது பொற்கொல்லர் ஒருவரின் பட்டறைக்கு நேரடியாகவே சென்று முதல்வர் ஆய்வு செய்தார். தங்க நகை தயாரிப்பு குறித்து அவர்களிடம் கேட்டறிந்தார். இந்த ஆய்வின் போது அமைச்சர் செந்தில் பாலாஜி, கோவை மாவட்ட ஆட்சியர் கிராந்தி குமார் உடனிருந்தனர்.

தங்க நகை தயாரிப்பு கூடங்களுக்கு நேரில் சென்று முதலமைச்சர் செய்த ஆய்வு கவனத்தை பெற்றுள்ளது.
இன்று மதியம் அரசு விருந்தினர் மாளிகையில் தங்க நகை தயாரிப்பில் ஈடுபடுபவர்களின் தேவைகளை கோரிக்கையாக தமிழ்நாடு விஸ்வகர்மா பேரவையின் தமிழ்நாடு அனைத்து தங்க நகை தொழிலாளர் சங்கத்தினர் முதலமைச்சரிடம் வழங்கினர்.

அதில் அனைத்து வசதிகள் கொண்ட தங்க நகை தொழில் பூங்கா ஒன்றை விரைவாக அமைத்து கொடுக்க வேண்டும், பொற்கொல்லர்கள் வாழ்வு உயர்த்திட வழிவகை செய்யவேண்டும்  என்பது உள்ளிட்ட கோரிக்கைகள் இடம்பெற்றிருந்தது. இந்நிலையில் கோவை கெம்பட்டி காலனியில் அதிக அளவில் பொற்கொல்லர்கள் வசித்துவரும் நிலையில் அவர்களின் தேவைகள் என்ன என்பதை இன்று மாலை நேரில் சந்தித்து கேட்டு ஆய்வு செய்தார் முதலமைச்சர்.

அவர்களின் கோரிக்கைகளை முதலமைச்சரிடம் நேரிலேயே சொல்லக்கூடிய வாய்ப்பு இந்த கள ஆய்வு மூலம் ஏற்பட்டுள்ளது.மேலும் கெம்பட்டி காலனி பகுதியில் உள்ள மக்களையும் சந்தித்து அவர்களின் கோரிக்கைகளையும் கேட்டறிந்தார்.