நெல்லை மாவட்டத்தில் உள்ள பேட்டை நகரத்தில் இன்று 2 மாடுகள் சாலையில் சண்டையிட்டு கொண்டதில் அவ்வழியே சென்ற 2 சக்கர வாகன ஓட்டி விபத்துக்குள்ளாகி அநியாயமாக உயிரிழந்தார்.

 திருநெல்வேலி தென் புறவழி சாலை வழியே இன்று காலை 2 சக்கர வாகனத்தில் வந்த 58 வயதான வேலாயுதராஜ் நீதிமன்றம் சென்று கொண்டிருந்தார். அந்த சாலையின் இடதுபுறம் சுற்றி திரிந்த 2 மாடுகள் ஒன்றோடு ஒன்று  சண்டையிட்ட போது அந்த வழியே வாகனத்தில் வந்த வேலாயுதராஜ் மீது ஒரு மாடு பலமாக மோதியது. இதனால் நிலைகுலைந்து கீழே விழுந்த வேலாயுதராஜ் எதிரே வந்த பேருந்தின் சக்கரத்தில் சிக்கினார். இந்த விபத்தில் அவர் சம்பவ இடத்திலேயே உயிர் இழந்தார்.

5 நாட்களுக்கு முன்னர் சென்னை திருவொற்றியூர் பகுதியில் மதுமதி எனும் 38 வயது பெண் அங்கு உள்ள சந்தைக்கு காய்கறி வாங்கச் சென்றபோது அப்பகுதியில் சுற்றித் திரிந்த எருமை மாடு அவரை முட்டி சாலையில் தரதரவென இழுத்து சென்றதால் அவர் படுகாயமடைந்தார். இது போல இந்தாண்டு தமிழகத்தில் பல சம்பவங்கள் நடைபெற்றுள்ளது.

கோவை காந்திமா நகர் பகுதியில் பேருந்து நிலையம் எதிரே மாடுகளை வளர்க்கும் சிலர் அப்பகுதியில்  இரவு நேரங்களில் மாடுகளை அவிழ்த்து விடுவதால் அவை சாலையில் சுற்றித்திரிகின்றன.

இதன் மீது கோவை மாநகராட்சியின் கவனம் தேவை. கோவை மாநகர் முழுவதும் மீண்டும் சாலையில் மாடுகள் பொதுமக்களுக்கு இடையூறாக, ஆபத்தாக அலட்சியமாக விடப்படுகிறதா என்பது பற்றி ஆய்வும் நடவடிக்கையும் தேவை.  

கோவை காந்திமா நகர் பகுதியில் சாலையில் வாகன ஓட்டிகளுக்கு இடையூறாக சுற்றி திரியும் மாடுகள்: