அதிமுக பொது செயலாளர் எடப்பாடி கே.பழனிசாமி மீது கோவை கோர்ட்டில் அவதூறு வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

கோவை விமான நிலையத்தில் சமீபத்தில் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி கே. பழனிசாமி நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.  அப்போது அவர் நிருபர்கள் கேட்ட கேள்விக்கு பதில் அளிக்கையில்:-

"நீங்கள் ஒருங்கிணைப்பு குழு குறித்த கேள்வி கேட்கலாமா? ரோட்ல போறவங்க வர்றவங்க எல்லாம் ஒருங்கிணைப்பு குழுவா? கோவையை சேர்ந்த ஒருவர் (கே.சி.பழனிசாமி) ஓ.பி.எஸ். காலத்தில் தான் அதிமுக கட்சியில் உறுப்பினராகவே சேர்ந்தார். உங்களுக்கு விவாத மேடைக்கு ஒரு ஆள் தேவை. அதனால் அவரை வைத்துள்ளீர்கள்" என பேசி இருந்தார். 

இந்த விவகாரத்தில் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் கே.சி. பழனிசாமி இன்று கோவை ஜே.எம்.எண் 1 நீதிமன்றத்தில் அதிமுக பொது செயலாளர் எடப்பாடி பழனிசாமி மீது அவதூறு வழக்கு தாக்கல் செய்துள்ளார்.

இந்த மனு மீதான விசாரணை 26ம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. இது குறித்து கே.சி.பழனிசாமி கூறுகையில், ''அதிமுக பொது செயலாளர் எடப்பாடி பழனிசாமி என்னைப் பற்றி உண்மைக்கு மாறான பொய்யான தகவலை கூறி வருகிறார். எனவே அவர் மீது அவதூறு வழக்கு தொடர்ந்து உள்ளேன்,'' என்றார்.