கோவையில் பிடிபட்ட சிறுத்தைப்புலி உயிரிழந்தது!
- by David
- Mar 11,2025
கோவை ஓணப்பாளையம் பகுதியில் ஆடுகளை வேட்டையாடிய சிறுத்தைப்புலியை இன்று வனத்துறையினர் பிடித்தனர்.
சிறுத்தைப்புலி நேற்று இரவு பூச்சியூர் அருகே உள்ள கலிங்கநாயக்கன்பாளையம் பகுதியில் விவசாய நிலத்தில் பதுங்கி இருப்பதாக வனத்துறையினருக்கு தகவல் கிடைத்தது. உடனடியாக 12 பேர் கொண்ட வனத்துறை குழுவினர் அங்கு சென்று, பதுங்கி இருந்த சிறுத்தையை வலை விரித்து பிடித்து உள்ளனர் என தகவல் இன்று காலை வெளிவந்தது.
அனுமதி கிடைத்த பின்னர் அதனை அடர்ந்த வனப் பகுதிக்கு கொண்டு சென்று விட வனத் துறையினர் திட்டமிட்டு இருந்த நிலையில், அந்த சிறுத்தைப்புலி உயிரிழந்ததாக தகவல் வெளிவந்துள்ளது.
அந்த சிறுத்தைபுலியின் பற்கள் உடைந்திருந்ததாகவும், அதன் உடலில் பல இடங்களில் காயங்கள், கால்களில் எலும்பு முறிவு இருந்ததாகவும், மற்றொரு விலங்குடன் சிறுத்தை சண்டை போட்டதற்கான காயங்கள் உள்ளதாகவும் கோவை வனத்துறை தகவல் தெரிவித்துள்ளனர்.
சிறுத்தைப்புலி உடல் மெலிந்து காணப்பட்டதாலும், காயம் இருந்ததாலும் அதை மருதமலை வனப்பகுதியில் வைத்து தொடர்ந்து சிகிச்சை அளித்துள்ளனர். ஆனால் சிகிச்சை பலனின்று அது உயிரிழந்தது என தெரியவருகிறது.