வெள்ளலூர் குப்பை கிடங்கினால் ஏற்படும் காற்று மாசு அந்த பகுதியில் மட்டுமல்லாமல் அதன் சுற்று வட்டாரத்தில் உள்ள இடங்களிலும் பரவிவருவது தொடர்கதையாக உள்ளது.
குப்பைக்கிடங்கில் வருடக்கணக்காக கொட்டி வைக்கப்பட்டுள்ள குப்பைகளால் நிலத்தடி நீர் பெருமளவு மாசடைந்துள்ளது. எனவே காற்று மாசுடன் வெள்ளலூர் பகுதி, கோணவாய்க்கால்பாளையம், கோவை மஹாலிங்கபுரம் ஆகிய இடங்களில் போர்வெல் மூலம் வரும் நீர் மாசு படிந்து மஞ்சள் நிற நீர் போல குழாய்களில் வந்தது.
இப்போது கூடுதலாக போத்தனூர் - சேரன் நகர் பகுதி அருகே உள்ள ஸ்ரீ ராம் நகரின் ஒரு பகுதியில் போர்வெல் நீர் இதே போல மஞ்சளாக வருகிறது. இதனால் அப்பகுதி மக்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.
ஏற்கனவே நல்ல தண்ணீர் வாரத்திற்கு 1 முறை தான் வரும் நிலையில் குடிநீர், சமையல், குளியல் என இந்த 3 முக்கிய பணிகளை தாண்டி துணி துவைத்தல் உள்பட மற்ற தேவைகளுக்கு போர்வெல் நீரைத்தான் நம்பி உள்ளனர். இப்போது அதுவும் இப்படி வந்தால் என்ன செய்வது என வருத்தத்தில் உள்ளனர்.
எனவே இந்த சம்பவம் குறித்து ஸ்ரீ ராம் நகர் குடியிருப்போர் நல்வாழ்வு சங்கம் சார்பில் புகார் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து அந்த பகுதியில், மாசு கட்டுப்பாடு வாரியத்தின் துணை பொறியாளர் மற்றும் குழுவினர் நேரில் வந்து ஆய்வு செய்து, நீரின் மாதிரிகளை மேற்படி ஆய்வுக்கு எடுத்து சென்றுள்ளனர்.
முன்னர் வெள்ளலூர் குப்பை கிடங்களில் நாளொன்றுக்கு 650 டன் குப்பை கொட்டப்பட்டது. தற்போது அது வெறும் 80 டன் ஆக குறைக்கப்பட்டுள்ளது என கோவை மாநகராட்சி தரப்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது. இது அவர்களுக்கு சற்று மகிழ்ச்சி தரும் செய்தியாக அமைந்தது. இந்நிலையில் இப்போது போர்வெல் நீர் மற்றுமொரு பகுதியில் மஞ்சளாக வருவது மக்கள் மத்தியில் மீண்டும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.