பச்சை, மஞ்சள் நிறத்தில் வரும் நிலத்தடி நீர்! வேதனையில் கோவை கணியூர் மக்கள் - காரணம் என்ன?
- by David
- Mar 11,2025
தொழிற்சாலை கழிவுகளால் கோவை மாவட்டம் கணியூர் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள நிலத்தடி நீர் மாசடைந்துள்ளதாகவும் இதனால் பொதுமக்கள் மிகவும் பாதிக்கப்பட்டு வருவதாகவும் தகவல் வெளிவந்துள்ளன.
கோவை மாவட்டத்தில் உள்ள கணியூர் கிராமத்தில் 15,000க்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றார்கள். சுமார் 5 ஆண்டுகளுக்கு மேலாக இங்குள்ள நிலத்தடி நீர் பச்சை,மஞ்சள் நிறமாக மாறி வருவதாகவும், இதற்கு தொழிற்சாலை கழிவுகள் காரணமென இப்பகுதி மக்கள் குற்றம் சாட்சி வருகின்றனர். இந்த சம்பவம் குறித்து இதற்கு முன்பு மாவட்ட ஆட்சியர் மற்றும் இதர அதிகாரிகளிடமும் புகார் தெரிவித்தும் இதுவரை நடவடிக்கை எடுக்கப்படாமல் இருந்து வருவதாக அவர்கள் தெரிவிக்கின்றனர்.
இதுகுறித்து அப்பகுதியில் வசிக்கும் சிலர் கூறுகையில், இந்த நீரை விவசாயத்திற்கு பயன்படுத்தியபோது, பயிர் கருகிப்போனது போல ஆனது. கட்டிடம் கட்டினாலும் இந்த தண்ணீரில் இருக்கும் கால்சியம் அளவு கட்டிடத்தை பாதிக்க செய்கிறது. பொதுமக்கள் குற்றம் சாட்டும் அந்த தொழிற்சாலை கூட நீரை வெளியே தான் வாங்குகின்றனர் என்று கூறுகின்றனர்.
தொழிற்சாலை அமைந்துள்ள மேற்குப் பகுதிகளில் பாதிப்பில்லை. ஆனால் கிழக்குப் பகுதிகளில் பாதிப்பு உள்ளது, ஏனென்றால் தண்ணீர் மேற்கிலிருந்து கிழக்கே வருகிறது. இந்த தண்ணியை பயன்படுத்தினால் செடிகூட வளர்வதில்லை . மாசுக்கட்டு வாரியம் தரப்பில் ஆழ்துளை கிணறு உள்ள நீரை இறைத்து விட்டால் பாதிப்பு இருக்காது என்கின்றனர். ஆனால் அவ்வாறு செய்தாலும் பாதிப்பு தொடர்கிறது என கூறுகின்றனர். இந்த துயரில் இருந்து அரசு தங்களுக்கு நிவாரணம் வழங்கவேண்டும் என அப்பகுதி மக்கள் கேட்டுக்கொண்டுள்ளனர்.