மூத்த காங்கிரஸ் தலைவரும், ஈரோடு கிழக்கு சட்டமன்ற உறுப்பினராக இருந்துவந்தவருமான EVKS இளங்கோவன் உடல்நலக்குறைவால் உயிரிழந்ததை முன்னிட்டு அந்த தொகுதியில் பிப்ரவரி 5ல் இடைத்தேர்தல் நடைபெறுமென அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இதில் இந்தியா கூட்டணி கட்சியான காங்கிரஸ்க்கு மீண்டும் இந்த தேர்தலில் வாய்ப்பு வழங்கப்படாமல் அதில் அங்கம் வகிக்கும் தி.மு.க.விற்கு அந்த வாய்ப்பு சென்றுள்ளது. தி.மு.க. சார்பாக வி.சி.சந்திரகுமார் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார்.
ஆனால் இந்த தேர்தலில் முக்கிய எதிர்கட்சியான அதிமுக போட்டியிடுவதில்லை என தெரிவித்துள்ளது. அதன் கூட்டணி கட்சியான தேமுதிகவும் தேர்தலை புறக்கணிப்பதாக அறிவித்துள்ளது. நா.த.க.வின் சீமான் இந்த தேர்தலில் அக்கட்சி களமிறங்கும் என தெரிவித்துள்ளார். வேட்பாளர் விரைவில் அறிவிக்கப்படுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. புதிதாக இந்த அரசியல் அரங்கில் நுழைந்துள்ள த.வெ.க. இந்த தேர்தல் களத்தில் கால் பதிக்கவில்லை.
இந்நிலையில் இன்று கோவை விமான நிலையத்தில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், ஈரோடு இடைத்தேர்தலை தேசிய ஜனநாயக கூட்டணி புறக்கணிப்பதாக தெரிவித்தார்.
"ஈரோடு இடைத்தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணியின் அனைத்து கட்சி தலைவர்களும் புறக்கணிப்பதாக முடிவு செய்துள்ளோம், இதனை பாஜக தேசிய தலைவர் ஜே.பி.நட்டாவிடம் தெரிவித்து அவர் அனுமதி அளித்துள்ளார். காரணம் பாரதிய ஜனதா கட்சி தேசிய அளவில் ஜம்மு காஷ்மீர், ஜார்க்கண்ட் என நக்சல் மற்றும் தீவிரவாத நடவடிக்கைகள் அதிகம் உள்ள பகுதிகளில் கூட தேர்தல்களை புறக்கணிக்காமல் போட்டியிட்டுள்ளது. ஆனால் தமிழ்நாட்டில் நடைபெறும் ஈரோடு இடைத்தேர்தலில் லஞ்சத்தை மிக சாதாரணமாக ஏற்றுக் கொள்ளும் விதத்தில் தேர்தல் நடத்தப்படும்.கடந்த முறை மக்கள் பட்டியில் அடைக்க வைக்கப்பட்டனர், தேசிய ஜனநாயக கூட்டணி போட்டியிட்டால் இம்முறையும் அதேபோல் மக்கள் பட்டியில் அடைக்கப்படுவார்கள், மக்களுக்கு அந்த கஷ்டத்தை கொடுக்க வேண்டாம் என நாங்கள் நினைக்கிறோம், " என்றார்.
"தவறு செய்யும் கட்சிகளை மக்கள் இந்த இடைத்தேர்தலில் கண்டிப்பாக தண்டிப்பார்கள் என கருதுகிறோம். அதே வேளையில் பாஜக தேர்தல் கண்காணிப்பு பணிகளை தீவிரமாக மேற்கொள்ளும். பணம், பரிசு பொருட்கள் ஆகியவற்றை திமுக கடந்த முறை போல வழங்கும். ஆளும் திமுக அரசு இந்த தேர்தலில் அதிகார துஷ்பிரயோகம் செய்யும். ஜனநாயக ரீதியில் ஈரோடு இடைத்தேர்தல் நடத்தப்படாது என்பதால் தான் பல்வேறு கட்சிகளும் தேர்தலை புறக்கணித்துள்ளனர். இதனை மக்கள் புரிந்து கொள்ள வேண்டும். இதற்கு முன்பு ஈரோட்டில் பலமுறை இடைத்தேர்தல் நடைபெற்ற போது எந்த மாற்றமும் ஏற்படவில்லை. இப்போதும் எந்த பலனும் மக்களுக்கு ஏற்படப் போவதில்லை" என்றார்.
தொடர்ந்து பேசிய அவர், மத்திய அரசு வழங்கும் பல்வேறு திட்டங்களை மாநில அரசு பாழாக்கி வருகிறது. அதில் குறிப்பாக விவசாயிகளுக்கு வழங்கப்படும் திட்டங்களும் அடங்கும் என குற்றம் சாட்டினார்.
நக்சல், தீவிரவாத நடவடிக்கைகள் அதிகம் உள்ள பகுதிகளில் தேர்தலை சந்தித்த பா.ஜ.க. ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலை சந்திக்காது - கோவையில் அண்ணாமலை பேட்டி
- by David
- Jan 13,2025