சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் 19 வயது மாணவிக்கு ஞானசேகரன் எனும் நபரால் ஏற்பட்ட பாலியல் சீண்டல் சம்பவம் தமிழகத்தை உலுக்கிய நிலையில், இந்த வழக்கின் முதல் தகவல் அறிக்கை (FIR) மாணவியின் முழு விவரங்களுடன் ஆன்லைனில் வெளியானது மிகப்பெரும் சர்ச்சையானது.
பாதிக்கப்பட்ட மாணவிக்கு நீதி கிடைக்கவேண்டும், கல்லூரி மாணவ, மாணவிகளுக்கு உரிய பாதுகாப்பு முறையாக வழங்கப்படவேண்டும் என்பதை வலியுறுத்தி அதிமுக சார்பில் பல்கலைக்கு வெளியே போராட்டம் நடைபெற்றது. அதேபோல வள்ளுவர்கோட்டத்தில் பாஜக தரப்பில் தமிழிசை சவுந்தரராஜன் தரப்பில் போராட்டம் நடத்தவும் முயற்சிகள் எடுக்கப்பட்டது. இந்த 2 ஆர்ப்பாட்டங்களும் காவல் துறையால் நிறுத்தப்பட்டது.
இந்நிலையில் இன்று கோவையில் செய்தியாளர்களை சந்தித்த தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, எப்படி அந்த FIR நகல் இணையத்தளத்தில் வெளிவந்தது என கேள்வி எழுப்பினார். தானும் காவல் துறையில் 9 ஆண்டுகள் பணியாற்றி உள்ளேன் என கூறிய அவர், இந்த பாலியில் சீண்டல் சம்பவத்தில் குற்றம்சாட்டப்பட்டுள்ள ஞானசேகரன், திமுக தொடர்பு உள்ளவர் என்பதால் தான் அந்த பெண்ணிடம் சீண்டலில் ஈடுபட்டார் (அதாவது திமுக பின்புலம் இருந்ததால் தான் தொடர் குற்றவாளியான அவரை காவல் நிலையம் கண்காணிப்பில் வைக்கவில்லை. இதனால் தான் அந்த குற்றத்தை துணிச்சலாக செய்யமுடிந்தது) என குற்றம் சாட்டினார்.
"இதேபோல ஒரு குற்றத்தை அவன் (ஞானசேகரன்) செய்திருக்கின்றான். அதே குற்றத்தை தற்போது 2ம் முறையாகவும் செய்து உள்ளான்," என கூறிய அண்ணாமலை இந்த சம்பவம் பற்றிய FIR வெளியே கசிந்தது எப்படி? என்று கேள்வி எழுப்பினர். இந்த சம்பவத்திற்கு பொறுப்பேற்று காவல் ஆணையர் (சென்னை) அல்லது குறைந்த பட்சம் துணை காவல் ஆணையர் பதவி பறிக்கப்படவேண்டும் என்றார்.
"இந்தியா முழுவதும் உள்ள காவல் நிலையங்கள் கண்ணாடி ஒளியிழை (fiber optics) மூலம் இணைக்கப்பட்டுள்ளது. இதில் தகவல் பதிவேற்றம் செய்தவுடன் அது பிரதான சர்வருக்கு செல்லும். இப்படி இருக்க எப்படி அந்த FIR வெளியே வரும்? இந்த அமைப்புகள் எல்லாமே மிக பாதுகாப்பானது. எனவே காவல் துறையை தவிர இதை வெளியே கசிய விட வேறு யாரால் முடியும்?" என அண்ணாமலை கேள்வி எழுப்பினர்.
அந்த முதல் தகவல் அறிக்கை (FIR) எழுதியது முறையாக எழுதப்படவில்லை என கூறிய அண்ணாமலை, அதில் அந்த பெண் குற்றம் செய்தவர் போல தகவல் எழுதப்பட்டுள்ளது என அவர் கூறினார். அந்த FIR இணையத்தளத்தில் கசிந்ததால் பாதிக்கப்பட்ட பெண்ணின் தகவல் முழுவதும் வெளிவந்தது. இதனால் அவர் மற்றும் அவர் குடும்பத்திற்கு நீங்கா துயரத்தை தந்துள்ளது காவல் துறை என்று கருத்து தெரிவித்தார்.
இந்த சம்பவத்தை கண்டிக்கும் வகையில், நாளை காலை 10 மணிக்கு ஒவ்வொரு பாஜக கட்சியினர் வீட்டுக்கு வெளியே ஆர்ப்பாட்டம் நடைபெறும். கட்சியினர் வீட்டுக்கு வெளியே வந்து பாதிக்கப்பட்ட பெண்ணுக்காகவும், தமிழக பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்யவேண்டும் எனவும் கூறி ஆர்ப்பாட்டம் செய்வார்கள் என அண்ணாமலை தெரிவித்தார்.
அத்துடன் அண்ணாமலை அவரின் வீட்டுக்கு வெளியே காலை 10 மணிக்கு தனக்கு தானே 6 சட்டை அடி கொடுத்து கொள்ளப்போவதாகவும், திமுக அரசு தமிழகத்தின் ஆட்சி பொறுப்பில் இருந்து அகற்றப்படும் வரை தான் செருப்பு அணிவது இல்லை எனவும் 48 நாட்களுக்கு விரதம் இருந்து முருகப்பெருமானின் ஆறுபடை வீட்டுக்கு சென்று முருக பெருமானிடம் முறையிடப்போவதாகவும் கூறினார்.