கடந்த சில நாட்களாக அவிநாசி ரோடு, ரேஸ்கோர்ஸ் பகுதிகளில் சில இளைஞர்கள் ரேஸ் பைக்கில் அதிவேகமாக செல்வதாகவும், வீலிங் செய்வதாகவும் புகார்கள் எழுந்தன.  

சில மாதங்களாகவே ரேஸ் கோர்ஸ் மற்றும் பல்வேறு முக்கிய சாலைகளில் இரு சக்கர வாகனங்களை கொண்டு சிலர் வேகமாக செல்வதும் சாகசம் செய்து, அதை இன்ஸ்டாகிராம் (Instagram) எனும் சமூக வலைத்தளத்தில் பதிவேற்றம் செய்துவருவது செய்தியானது.

இதுபோன்று சம்பவங்கள் நடைபெறுவது செய்தியாக ஒரு புறம் வெளிவர, மற்றொரு புறம் புகாராகவும் எழுந்ததை அடுத்து போலீசார் நகரின் குறிப்பிட்ட பகுதிகளில் உள்ள சி.சி.டி.வி. கேமராக்களை ஆய்வு செய்தனர். அதில் கடந்த நவம்பர் 1ம் தேதியில் இருந்து நேற்று வரை அதி வேகமாக பைக் ஓட்டிய 17 இளைஞர்கள் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து அபராதம் விதித்துள்ளனர்.

கோவை மாநகரில் அனுமதிக்கப்பட்ட வேகத்தை மீறி சாலைகளில் வாகனங்களை வேகமாக இயக்கும் நபர்களை காவல் துறையினர் கண்காணித்து வருகின்றனர். அவ்வாறு வேகமாக வாகனங்களை இயக்கும் நபர்கள் மீது வழக்கு பதிவு செய்து வருகின்றனர்.

தொடர்ந்து இதுபோல் மற்ற வாகன ஓட்டிகளுக்கு அச்சுறுத்தல் ஏற்படும் விதமாக போக்குவரத்து விதிமீறலில் ஈடுபடுபவர்களின் பைக் பறிமுதல் செய்யப்படும் எனவும் போலீசார் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும் கவனம் தேவை!

கோவை மாநகரில் பைக் ஸ்டாண்டுகளில் ஈடுபடும் ஒரு கும்பல் இன்ஸ்டாகிராமில்  c_l_u_t_c_h__breaker எனும் கணக்கு வழியே ஸ்டண்ட் விடியோக்களை தொடர்ந்து பதிவேற்றம் செய்து வருகிறது. இதற்கு முன்னர் இவ்வாறு ஸ்டண்டில் அவர்கள் ஈடுபட்டது குறித்து செய்தி வெளியானதையும் ஒரு வீடியோவாக எடிட் செய்து தாங்கள் ஏதோ சாதனை செய்துள்ளது போல் பதிவேற்றம் செய்துள்ளனர்.

இவ்வாறு ஒரு கும்பல் இந்த பைக் ஸ்டாண்டுகளில் ஈடுபடுகிறது என்றால், மற்றொரு சிலர் ரேஸ் கோர்ஸ் மற்றும் அவிநாசி சாலை பகுதிகளில் இரவு 9.30 மணிக்கு மேல் பைக்குகளில் ட்ரிப்பிள்ஸ் செல்வதை வாடிக்கையாக கொண்டுள்ளனர். இவர்கள் இவ்வாறு செய்வது சந்தேகத்தை எழுப்புகிறது.