கோவையில் கலைஞரின் பெயரில் அமையவுள்ள பிரம்மாண்ட நூலகம் கட்டும் பணி விரைவில் துவங்கும் என இன்று நடைபெற்ற சட்டப்பேரவை கூட்டத்தொடரில் முதலமைச்சர் ஸ்டாலின் தெரிவித்தார்.

இந்த ஆண்டின் நிதிநிலை அறிக்கையில் கோவைக்கு இந்த நூலகம் அமைத்திட அரசு அறிவிப்பை வெளியிட்டது. கலைஞர் பெயரில் பிரம்மாண்ட நூலகம் மற்றும் அறிவியல் மையம் அமைக்கப்படும் என்ற அறிவிப்பு கோவையில் உள்ள புத்தக பிரியர்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியது.

மதுரையில் கடந்த ஆண்டு திறக்கப்பட்ட பிரம்மாண்ட நூலகம், 6 மாடிகள் கொண்டதாகவும், 3 லட்சத்திற்கும் மேற்பட்ட புத்தகங்கள், தனி டிஜிட்டல் பிரிவு, குழந்தைகளுக்கான பிரத்தியேக புத்தகங்கள் மற்றும் வாசிப்பு பிரிவு என 2.13 லட்சம் சதுரடி இடத்தில் அமைந்தது. இதற்கு இணையாக கோவையில் பிரமாண்ட நூலகம் அமையுமா என்பது தான் இங்குள்ள பலரின் எதிர்பார்ப்பு.

அதே நேரம் இன்று சட்டப் பேரவை கூட்டத் தொடரில் விளையாட்டு துறை அமைச்சர் உதயநிதி கோவை மாவட்டத்தில் உலக தரம் கொண்ட கிரிக்கெட் மைதானம் கட்டுவதற்கான இடத்தேர்வு நடைபெற்றுள்ளது எனவும், இந்தாண்டு கோவையில் இந்த மைதானம் கட்டப்படும் எனவும் கூறினார். இத்துடன் கோவை மாவட்டத்தில் நவீன வசதிகள் கொண்ட புது விளையாட்டு விடுதி அமைக்கப்படும் என்றார்.

அது என்ன விளையாட்டு விடுதி?

தமிழகத்தில் வெவ்வேறு விளையாட்டுகளில்  திறமையுள்ள மாணவர்களை கண்டறிந்து, மாநிலத்தில் உள்ள பல்வேறு மாவட்டங்களில் அமைந்துள்ள விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் (SPORTS DEVELOPMENT AUTHORITY OF TAMILNADU) கீழ் செயல்படும் விளையாட்டு விடுதிகள் வாயிலாக, இலவச பயிற்சி மற்றும் கல்வி அளிக்கப்பட்டு வருகிறது. இந்த விடுதி கோவை நேரு ஸ்டேடியம் வளாகத்தில் உள்ளது.  இதில் ஒவ்வொரு ஆண்டும் 60 மாணவர்களுக்கு சேர்க்கை வழங்கப்பட்டு வருகிறது.  

இந்நிலையில் புது விடுதி நவீன வசதிகளுடன் அமையும் என்று அமைச்சர் கூறியுள்ளது விளையாட்டு மாணவர்களிடம் கண்டிப்பாக உற்சாகத்தை ஏற்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.