கோவை மாவட்டத்தில் மார்ச் 26ம் தேதி வரை மூன்று நாட்களுக்கு ஒரு சில இடங்களில் லேசான மழைக்கு வாய்ப்புள்ளது எனவும் இந்த நாட்களில் குறைந்தது 24 டிகிரி செல்சியஸ் முதல் அதிகபட்சம் 35 டிகிரி செல்சியஸ் வரை வெப்பம் பதிவாக வாய்ப்பு உள்ளது எனவும் சென்னை வானிலை ஆய்வு மையம் கணித்துக்கூறியுள்ளது.

மார்ச் 27ம் தேதி மழைக்கு வாய்ப்பில்லை. இந்த தினத்தில் குறைந்தது 25 டிகிரி செல்சியஸ் முதல் அதிகபட்சம் 35 டிகிரி செல்சியஸ் வரை வெப்பம் பதிவாக வாய்ப்புள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.மார்ச் 28, 29, 30ம் தேதிகளில் குறைந்தது 25 டிகிரி செல்சியஸ் முதல் அதிகபட்சம் 36 டிகிரி செல்சியஸ் வரை வெப்பம் பதிவாக வாய்ப்புள்ளதாகவும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

கோவை மக்களின் கனிவான கவனத்திற்கு :-  

தற்போது கோடை காலம் என்பதால் வெயில் நேரத்தில் இறுக்கமான ஆடைகளை அணிவதை தவிர்க்கவும்.தேநீர், காபி, மது மற்றும் கார்பன் ஏற்றப்பட்ட (Carbonated) குளிர்பானங்கள் போன்றவற்றை அருந்துவதை தவிர்க்க வேண்டும். இவை உடலில் நீரிழப்பை ஏற்படுத்தும்.

கோடை காலம் முடியும் வரை காலை 11 மணி முதல் மாலை 3 மணி வரை வெயிலில் அவசிய பணிகள் தவிர பிற காரியமாக செல்வதை தவிர்க்க வேண்டும். வெயில் நேரங்களில் சிறுவர்கள் திறந்தவெளியில் விளையாடுவதை தவிர்க்க வேண்டும். வெயிலில் குழந்தைகளை கார் போன்ற வாகனங்களில் தனியாக விட்டுச் செல்வதை தவிர்க்க வேண்டும். ஏனெனில் கதவு அடைக்கப்பட்ட வாகனங்களில் வெப்பநிலை அபாயகரமான நிலையில் உயரக்கூடும். 

இவ்வாறு வெயில் தாக்கத்திலிருந்து தங்களை பாதுகாத்துக் கொள்ளுமாறு மாநகராட்சி நிர்வாகம் சார்பில் கேட்டுக்கொள்ளப்படுகிறது.