உக்கடம்-பொள்ளாச்சி சாலையில் போக்குவரத்து நெரிசலை குறைக்க ரூ. 300 கோடிக்கும் அதிகமான மதிப்பீட்டில் உக்கடம் முதல் ஆத்துப்பாலம் வரை மேம்பாலம் கட்டும் பணி 2018 முதல் துவங்கி 2024 வரை நடைபெற்று வருகிறது.

இந்த மேம்பாலத்தின் கட்டுமான பணிகளில், உக்கடம் பேருந்து நிலையத்தில் இருந்து வாலாங்குளம் வரை அமைக்கப்பட்டு வரும் இறங்குதளம் தவிர மற்ற கட்டுமான பணிகள் நிறைவடைந்துள்ளது. இந்த இறங்குதளம் அமைக்கும் பணி தற்போது வேகமாக நடைபெற்று வருகிறது.

கடந்த ஜூன் மாதம் பொதுப்பணி துறை மற்றும் நெடுஞ்சாலைகள் துறை அமைச்சர் எ.வ.வேலு மேம்பாலத்தில் ஆய்வு மேற்கொண்டார். அதற்கடுத்து இந்த மேம்பாலத் திட்டத்தின் நிறைவு குறித்து தகவல்களை கோவை மாவட்ட நிர்வாகம் தமிழக அரசுக்கு அனுப்பி வைத்திருந்தது.

ஜூன் மாத இறுதிக்குள் திறப்பு நடைபெறும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் இதில் சோதனை ஓட்டம் மற்றும் திறப்பு தள்ளிப்போய் கொண்டே உள்ளது. இந்நிலையில் ஆகஸ்ட் 20க்குள் முடிக்க திட்டமிட்டு பணிகள் நடைபெற்று வருகிறது. ஆகஸ்ட் 31க்குள் அனைத்து பணிகளை முடிக்க அவகாசம் இருந்தாலும், 20 ஆம் தேதிக்குள் முடிக்க பணிகள் வேகமாக நடைபெற்றுவருகிறது என தகவல்கள் தெரிவிக்கின்றன.

விரைவில் இந்த மேம்பாலம் திறக்கப்படும் என்ற எதிர்பார்ப்பில் அப்பகுதி மக்கள் மற்றும் அந்த வழியே செல்லும் வாகனவோட்டிகள் காத்துள்ளனர்.