பிறப்பு மற்றும் இறப்பு புதுப்பிக்கப்பட்ட பதிவுச்சட்டம் -2000 விதிகளின்படி, 2000ம் ஆண்டிற்கு முன்பு பிறந்த நபர்களின் பெயரை பதிவு செய்ய வேண்டும் என்ற விதிமுறையின்படி வருகின்ற டிசம்பர் 31, 2024-க்குள் மேற்குறிப்பிடப்பட்ட நபர்கள் அவர்களின் பெயரை பதிவு செய்ய கோவை மாநகராட்சி தொடர்ந்து அறிவுறுத்தி வருகிறது.

அவ்வாறு செய்ய தவறினால் 2000-ம் ஆண்டிற்கு முன்னர் பிறந்த நபர்களின் பெயரை நிரந்தரமாக பதிவு செய்ய இயலாது என்பதால் இதுவரை பெயரை பதிவு செய்ய தவறியவர்கள் இந்த கால அவகாசம் காலத்திற்குள் பெயரை பதிவு செய்துகொள்ளுமாறு மாநகராட்சி நிர்வாகம் கேட்டுக்கொண்டுள்ளது. 

ஏற்கனவே மாநில அரசாங்கத்தால் 25 ஆண்டுகள் கால அவசாசம் நீட்டிக்கப்பட்டிருந்த நிலையில் இனி கால அவகாசம் நீட்டிக்கப்படாது என்றும் இதன் மூலம் தெரிவிக்கப்படுகிறது.

எனவே, 2017-ம் ஆண்டு வரைக்கும் பிறந்த குழந்தைகளின் பெயருடன் பிறப்பு சான்றிதழ் பெற கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்திற்கு சென்றும், 2017-க்கு பின்னர் பிறந்த குழந்தைகளுக்கு, குழந்தை பிறந்த இடம், சார்ந்த வார்டு அலுவலகங்களுக்கு சென்றும், குழந்தையின் பெயர் மற்றும் பிறந்த தேதி கொண்ட ஏதேனும் ஒரு ஆவணத்துடன் (School Mark Sheet / School TC / Bonafied Letter / Etc..) விண்ணப்ப கட்டணம் செலுத்தியும் உரிய விண்ணப்பத்தில் விண்ணப்பித்தும் குழந்தை பெயருடனான பிறப்பு சான்றிதழ் பெற்றுக் கொள்ள தெரிவிக்கப்படுகிறது.

மேலும், நடப்பாண்டில் பிறக்கும் தங்களின் குழந்தைகளுக்கு ஒரு வருடத்திற்குள் சம்பந்தப்பட்ட மாநகராட்சி அலுவலகத்திற்கு சென்று குழந்தையின் பெயரை (கால தாமத பதிவுக்கட்டணமின்றி) பதிவு செய்ய பொது மக்களுக்கு தெரிவிக்கப்படுகிறது என மாநகராட்சி கேட்டுக்கொண்டுள்ளது.