கோவையில் மெட்ரோ ரயில் திட்டத்தின் கீழ் அமையவுள்ள ரயில் நிலையங்களுக்கான இடங்களையும், வழித்தடங்கள் அமையும் இடங்களையும், AIIB எனும் ஆசிய உள்கட்டமைப்பு முதலீடு வங்கியின் குழு இன்று கோவையின் முக்கிய இடங்களில் சென்னை மெட்ரோ ரயில் துறை அதிகாரிகளுடன் இணைந்து ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர். 

சென்னை மெட்ரோ ரெயில் நிறுவனத்தின் திட்ட இயக்குனர் அர்ச்சுணன், தலைமை பொது மேலாளர் ரேகா பிரகாஷ், ஆசிய உள்கட்டமைப்பு முதலீட்டு வங்கியின் உயர் முதலீட்டு மற்றும் போக்குவரத்துக்கு திட்ட அலுவலர் வென்யுகு (Wenyu Gu) உள்ளிட்ட குழு முதல் கட்டமாக இன்று காலை இவர்கள் கோவை உக்கடம் பகுதியில் ஆய்வு மேற்கொண்டனர்.

வங்கி பிரதிநிதிகள் நேரடி ஆய்வுக்குப் பிறகு வரும் வெள்ளிக் கழமை தமிழ்நாடு அரசின் நிதித்துறை செயலாளரை சந்தித்தும் ஆலோசனையும் மேற்க்கொள்ள உள்ளனர்.  இதற்கு பின்னர் இந்த திட்டத்திற்கு இந்த வங்கி நிதி ஒதுக்குவது பற்றிய தகவல்கள் வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மெட்ரோ திட்டத்தின் முதல் கட்டம், 20 கிலோமீட்டர்களுக்கு உக்கடம் பேருந்து நிலையம் முதல் அவிநாசி சாலை வழியே கோவை விமான நிலையம் வரையும், 14.4 கிலோமீட்டருக்கு கோவை ரயில்வே சந்திப்பு முதல் சத்தி சாலை வழியே வளியாம்பாளையம் வரை அமைகிறது.

முதல் வழித்தடத்தில் 18 நிறுத்தங்களும், இரண்டாம் வழித்தடங்களில் 14 நிறுத்தங்களும் இடம்பெறுகின்றன.