வெள்ளிங்கிரியில் தரிசனம் முடித்துவிட்டு மலையிரங்கிய பக்தர் மூச்சு திணறல் ஏற்பட்டு மரணம்!
- by CC Web Desk
- Apr 11,2025
கோவை மாவட்டத்தில் உள்ள வெள்ளிங்கிரி மலையில் பிப்ரவரி மாதம் முதல் மே மாதம் வரை பக்தர்கள் மலை ஏறி சாமி தரிசனம் செய்ய அரசு தரப்பில் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. பக்தர்கள் உற்சாகமாக மலை ஏறி வருகின்றனர்.
இந்த நிலையில் தற்போது 42 வயதான காஞ்சிபுரத்தை சேர்ந்த பக்தர் ஒருவர் மலையேறி சாமி தரிசனம் செய்து விட்டு கீழே இறங்கி வரும் போது மூச்சுத்திணறல் ஏற்பட்டு உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
காஞ்சிபுரத்தை சேர்ந்தவர் ரமேஷ் (42).காஞ்சிபுரத்தில் தனியார் வங்கியில் பணிபுரிந்து வந்துள்ளார். இவருக்கு மனைவி மற்றும் 2 குழந்தைகள் உள்ளனர்.
இவர் கடந்த 9ம் தேதி தனது நண்பர்களுடன் வெள்ளிங்கிரி மலை ஏறி உள்ளார். அங்கு சாமி தரிசனத்தை முடித்துவிட்டு இன்று அதிகாலை 6வது மலை வழியே வரும்போது மூச்சு திணறல் ஏற்பட்டு மயங்கி விழுந்து உயிரிழந்துள்ளார்.
கடும் குளிர் காரணமாக இவ்வாறு அவருக்கு ஏற்பட்டிருக்கலாம் என்று கூறப்படுகிறது. இதுகுறித்து உடனே ஆலந்துறை காவல்துறையினர் மற்றும் கோவில் நிர்வாகத்தினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
அதற்குப் பின்னர் வனத்துறையினர் உதவியுடன் தற்போது உயிரிழந்த ரமேஷின் உடலை கீழே கொண்டு வந்துள்ளனர்.