மோடி அரசு வந்த பின் தமிழகத்திற்கு கொடுக்கப்பட்ட பணம், நிதி பகிர்வு அடிப்படையில் 2 மடங்கு உயர்ந்திருக்கிறது - கோவையில் அண்ணாமலை பேச்சு
- by David
- Feb 15,2025
கோவை ஈச்சனாரி பகுதியில் உள்ள தனியார் மண்டபத்தில் சமூக தன்னார்வ நிறுவனம் ஒன்றின் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, சர்வதேச அளவில் உலக நாடுகள் சந்தித்து வரும் சவால்கள் குறித்தும், சர்வதேச அரங்கில் இந்தியா அடைந்து வரும் பொருளாதார முன்னேற்றம் மற்றும் சாதனைகள் குறித்தும் எடுத்துரைத்தார்.
இந்த நிகழ்விற்கு பின்னர் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவரிடம் தமிழக முதலமைச்சர் ஸ்டாலின், மத்திய பட்ஜெட்டில் தமிழகத்திற்கு எந்த நிதியும் ஒதுக்கவில்லை எனக் கூறியது குறித்து செய்தியாளர்கள் அவரிடம் கேட்டனர்.
அதற்கு அவர், முதல்வர் ஒன்றை புரிந்து கொள்ள வேண்டும், பட்ஜெட்டை பொருத்தவரை நேரடி நிதி பகிர்வு மூலமாக நிதி வந்து விடுகிறது. தமிழகத்தை பொறுத்தவரை கிட்டத்தட்ட அனைத்து திட்டங்களுமே மத்திய அரசு செயல்படுத்திக் கொண்டிருக்கிற திட்டங்கள். முதியோர் உதவித்தொகை, ஏழைகளுக்கான வீட்டு திட்டம், முத்ரா கடன் திட்டம், விவசாயிகளுக்கு கிசான் சம்மான் நிதி, போன்று பல்வேறு திட்டங்களில் கோடிக்கணக்கான மக்கள் பயன் பெற்றுக் கொண்டிருக்கிறார்கள்.
மோடியின் அரசு வந்த பிறகு தமிழ்நாட்டிற்கு கொடுக்கப்பட்ட பணம் , நிதி பகிர்வு அடிப்படையில் இரண்டு மடங்கு உயர்ந்திருக்கிறது. சில இடங்களில் மூன்றரை மடங்கு உயர்ந்திருக்கிறது. ரூ.46,000 கோடி இன்றைய தினத்திற்கு தேசிய நெடுஞ்சாலை வேலைகள் தமிழ்நாட்டில் நடந்து கொண்டிருக்கிறது. விமான நிலையம் துறைமுகத்திலிருந்து அனைத்து வேலைகளும் நடந்து கொண்டிருக்கிறது, இப்படி இருக்கையில் எந்த அடிப்படையில் முதலமைச்சர் தமிழ்நாட்டுக்கு எந்த நிதியும் வரவில்லை என்று கூறுகிறார் என கேள்வி எழுப்பினார்.
எல்லா வருடத்திலும் எல்லா மாநிலத்திற்கும் ஸ்பெஷல் ஸ்கீம்ஸ் வராது, 2021-2022 ல் மிகப்பெரிய அளவில் ரூ.1 லட்சத்து 20 ஆயிரம் கோடி, ஒரே ஆண்டில் தேசிய நெடுஞ்சாலைக்கு வந்தது. போன வருடம் ஆந்திராவுக்கும் இந்த வருடம் பீகாரவுக்கும் கொடுத்திருக்கிறார்கள். முதலமைச்சர் வெள்ளை அறிக்கை வெளியிட தயாரா? ஆட்சிக்கு வந்ததிலிருந்து அவர்களுடைய நிதி அமைச்சரிடம் சொல்லி வெள்ளை அறிக்கை வெளியிட தயாரா?
காங்கிரஸ் ஆட்சியில் எவ்வளவு ஒதுக்கப்பட்டது, பாஜக ஆட்சியில் எவ்வளவு ஒதுக்கப்பட்டது, அதேபோல அவர்களுடன் மேடை போட்டு விவாதிப்பதற்கு பாஜக தயாராக உள்ளது. ஆர்.எஸ்.பாரதி மேடை போட்டு விவாதிப்பதற்கு தயார் என்று கூறினார், அதற்கு நாங்களும் தயார் தான். மாநில அரசின் பட்ஜெட்டை நீங்கள் பேசுங்கள். மத்திய அரசின் பட்ஜெட்டை நாங்கள் பேசுகிறோம், உங்களிடம் டேட்டா இருந்தால் வெள்ளை அறிக்கை கொண்டு வாருங்கள். எங்களுடைய டேட்டாவை நாங்கள் கொண்டு வருகிறோம். யார் தமிழகத்திற்கு எவ்வளவு கொடுத்திருக்கிறார்கள் என்பது மக்களுக்கு நன்றாக தெரியும், அதனால் முதலமைச்சர் எதன் அடிப்படையில் தொடர்ந்து பட்ஜெட்டைப் பற்றி பேசிக் கொண்டிருக்கிறார் என்பது தெரியவில்லை என்று கூறினார்.