கோவையில் பலவருடங்களாக வெறும் 1 ரூபாய்க்கு இட்லி வழங்கிவரும் 'இட்லி பாட்டி' கமலாத்தாவிற்கு முன்னாள் அமைச்சரும் அதிமுக தலைமை நிலைய செயலாளருமான எஸ்.பி.வேலுமணி தனது சொந்த செலவில் 2 செண்ட் இடம் வாங்கி கொடுத்தார்.
90 வயதான கமலாத்தாள், கோவை தொண்டாமுத்தூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பூலுவப்பட்டி, வடிவேலம்பாளையம் பகுதியை சேர்ந்தவர். பல வருடங்களாக ஒரு ரூபாய்க்கு இட்டிலி வழங்கி வரும் அவரின் நேர்மையையும், சேவையையும் பாராட்டும் விதமாக அவரது வீட்டின் அருகில் இரண்டு செண்ட் இடம் வாங்கி அவரது பெயருக்கு பத்திரப்பதிவு செய்து இடத்தின் பத்திரத்தை கமலாத்தாவிடம் ஒப்படைத்து உள்ளார் எஸ்.பி.வேலுமணி.
இது நிஜமாகவே பாராட்டக்கூடிய செயல் என்கின்றனர் பொதுமக்கள். உண்மை தான். பசி போக்கும் தர்ம காரியத்தை எத்தனையோ ஆண்டுகளாக செய்துவந்த ஒருவருக்கு இப்போது நன்மைகள் நடப்பது மகிழ்ச்சியை ஏற்படுத்துகிறது. தர்மம் தலைகாக்கும் என்பது எஸ்.பி.வேலுமணி அவர்களின் இந்த செயல்மூலம் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
ஆனால் இட்லி பாட்டிக்கு பல ஆண்டுகளுக்கு முன்பே தேவையான பெரும் உதவிகளை இந்தியாவின் பெரும் செல்வந்தர்களில் ஒருவரான ஆனந்த் மஹிந்திரா செய்துள்ளார் என்பது உங்களுக்கு தெரியுமா?
2018-19ல் The News Minute எனும் ஆன்லைன் செய்தி நிறுவனம் இட்லி பாட்டியின் உன்னத பணியை வெளிக்கொண்டு வந்தது. அப்போது பல ஊடகங்களும் இட்லி பாட்டி பற்றி எழுதத்துவங்கினர் என்றாலும் ஆனந்த் மஹிந்திரா கண்களில் The News Minute நிறுவனம் வெளியிட்ட வீடியோ தென்படவே அவர் 2019ல் அதுபற்றி ஒரு ட்வீட் போடுகிறார்.
அதில், கமலாத்தாவை அவர் 'இட்லி அம்மா' என்று அழைத்து "அவர் இன்னும் விறகு அடுப்பில் தான் சமைக்கிறார், அவரை அணுக யாராவது உதவினால் அவர் வியாபாரத்துக்கு தேவையான உதவிகளை செய்யவும், ஒரு LPG கேஸ் அடுப்பை வாங்கி தரவும் தான் விரும்புவதாக சொன்னார். அதற்கு அடுத்து அவரின் நிறுவன ஊழியர்கள் கமலாத்தா பாட்டியை தொடர்பு கொண்டு அவருக்கு என்ன வேண்டும் என்று கேட்டனர்.
தனக்கு வீடு இல்லை. சமையல் செய்ய நல்ல இடமில்லை என கூறி, அதற்கு உதவி கேட்டிருந்தார். அதன் பின் 2021 ஏப்ரல் 2 ஆம் தேதி அன்று தொண்டாமுத்தூர் பத்திர பதிவு அலுவலகத்தில் அவருக்கு மஹிந்திரா நிறுவனம் தரப்பில் நிலம் பதியப்பட்டது. விரைவில் வீடும் கட்டப்படும் என்று உறுதியளிக்கப்பட்டது.அதே நேரத்தில் அவருக்கு ஸ்டோவ் மற்றும் பாரத் கேஸ் நிறுவனம் மூலம் LPG இணைப்பு கிடைக்கவும் வழிவகை செய்யப்பட்டது.
2022 அன்னையர் தினத்தன்று இட்லி அம்மா என்று அழைத்த ஆனந்த் மஹிந்திரா, கமலாத்தாவுக்கு சொந்தமாக ஒரு வீட்டை கட்டி தந்தார். அதை அவருக்கு பரிசாக வழங்கி மகிழ்ந்தார்.
கடமையை செய், பலனை எதிர்பார்தே என்ற சொல்லுக்கிணங்க இட்லி பாட்டி தன் பணியை தொடர்ந்து செய்துவந்தார். காலம் கடந்தாலும் செய்த நல்ல காரியத்தின் பலன் அவரை தேடி அவர் வாசலுக்கே வந்தது. இன்று மற்றுமொரு நன்மை அவருக்கு நடந்துள்ளது.
நிச்சயமாக இதை ஊடகம் வெளியே எடுத்து சொல்லவில்லை என்றால் இந்த மாற்றம் நடந்திருக்காது.
இட்லி பாட்டிக்கு இலவசமாக இடம் வழங்கினார் எஸ்.பி.வேலுமணி ... ஆனால் அன்றே அன்பைக்கொட்டி அசத்தினார் ஆனந்த் மஹிந்திரா!
- by David
- Sep 20,2024