கோவை மாவட்டம் பேரூர் தாலுகாவில் மலை அடிவார கிராமங்களில் சட்டவிரோதமாக மண் எடுக்கும் பணிகளை உடனடியாக தடுத்து நிறுத்த வேண்டும் என தமிழ்நாடு அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கோவை மாவட்டம் மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரம் வழியே அமைந்துள்ள மதுக்கரை, ஆலந்துறை உள்ளிட்ட பகுதிகளில் சட்டவிரோதமாக செம்மண் எடுக்கப்பட்டு வருவது குறித்து நீதிமன்றத்தில் தொடுக்கப்பட்ட வழக்கில், இன்று வழக்கறிஞர் புருஷோத்தமன் வீடியோ ஆதாரங்களுடன் நீதிபதிகள் சதிஷ் குமார் மற்றும் பாரத சக்கரவர்த்தி ஆகியோர் அடங்கிய அமர்வில் முறையீடு ஒன்றை செய்தார்.
இந்த வழக்கில், கோவை மாவட்ட ஆட்சியர் நேரில் சென்று ஆய்வு செய்ய நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. ஆனால் ஆட்சியருக்கு பதில் கனிமவள துறை உதவி இயக்குனர் ஆய்வு செய்திருந்தார். ஆட்சியர் ஆய்வு செய்து அறிக்கை சமர்ப்பிக்க அரசு தரப்பில் கால அவகாசம் கோரப்பட்டுள்ளது.
இதனையடுத்து, கனிமவள துறை உதவி இயக்குனர் சமர்ப்பித்த அறிக்கையில், மண் எடுத்தவர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது என கூறப்பட்டுள்ளதை கண்டு, இந்த நடவடிக்கை கண்துடைப்பு என நீதிபதிகள் கூறி அதிருப்தி தெரிவித்தனர்.
இந்த வழக்கில் மண் கடத்தல் தொடர்பாக சமர்ப்பிக்கப்பட்ட வீடியோ ஆவணத்தில், எந்த வித கட்டுப்படும் இன்றி பெருமளவில் செம்மண் எடுக்கப்படுவது உறுதி ஆகி உள்ளது எனவும், இதை தொடர்ந்து அனுமதித்தால் மேற்கு தொடர்ச்சி மலையே காணாமல் போய்விடும் எனவும், அங்கு பெருமளவு நிலச்சரிவு அபாயம் உள்ளது எனவும் எச்சரித்தனர்.
மணல் எடுப்பதால் உருவாகும் குழிகளில் வனவுயிர்கள் சிக்கிக்கொள்ளும் ஆபத்தும் உள்ளது என்பதால் இந்த அப்பகுதிகளில் அரசு மட்டும் பட்ட நிலங்களில் மண் எடுக்க தடை விதித்தும், மண் எடுப்பதை உடனடியாக தடுத்து நிறுத்தவும் அரசுக்கு நீதிமன்றம் உத்தரவிட்டது.
மண் எடுப்பது தொடர்பாக கிராம நிர்வாக அலுவலர் அளித்த புகார் மீது நடவடிக்கை எடுக்காமல் இருந்தால் இந்த வழக்கு சிபிஐ வசம் ஒப்படைக்கப்படும் எனவும் எச்சரித்த நீதிமன்றம், மண் எடுப்பவர்களை கைது செய்யவும், அவர்கள் மணல் எடுக்க பயன்படுத்தும் இயந்திரங்களை பறிமுதல் செய்யவும் தமிழ்நாடு அரசுக்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இது தொடர்பான விசாரணை தள்ளிவைக்கப்பட்டுள்ளது.
கோவையில் இந்த செயலை தொடர அனுமதித்தால் மேற்கு தொடர்ச்சி மலையே காணாமல் போய்விடும்! அரசுக்கு பறந்த உயர்நீதிமன்ற உத்தரவு! என்ன சம்பவம்? யார் காரணம்?
- by David
- Sep 20,2024