தைப்பூசம் 2025: மருதமலையில் இந்த தேதிகளில் மலைப்பாதையில் வாகனங்கள் செல்ல தடை!
- by David
- Jan 29,2025
கோவையில் பிரசித்தி பெற்ற மருதமலை சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலில் தைப்பூசத்தை முன்னிட்டு, வரும் பிப்ரவரி 4 முதல் 8 வரை மற்றும் பிப்ரவரி 13, 14 ஆகிய தேதிகளில் மலைக்கோயிலுக்கு நான்கு சக்கர வாகனங்களில் செல்வதற்கு அனுமதியில்லை. பிப்ரவரி 9 முதல் 12 வரை இரண்டு சக்கரம் மற்றும் நான்கு சக்கர வாகனங்களில் செல்வதற்கு பக்தா்களுக்கு அனுமதியில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து கோவை மாவட்ட கலெக்டர் கிராந்திகுமாா் கூறியுள்ளதாவது:-
கோவை மருதமலை சுப்பிரமணிய சுவாமி கோயிலில் தைப்பூச தோ் திருவிழா, பிப்ரவரி 4 முதல் 14-ஆம் தேதி வரை சிறப்பாக நடைபெற உள்ளது. அதன்படி, பிப்ரவரி 5-ஆம் தேதி காலை 6 மணி முதல் 7 மணிக்குள் கொடியேற்றமும், பிப்ரவரி 10-ஆம் தேதி பகல் 12.10 முதல் 12.30 மணி வரை திருக்கல்யாணமும், பிப்ரவரி 11-ஆம் தேதி நண்பகல் 11 மணிக்கு தைப்பூச திருத்தோ் வடம் பிடித்தல் நிகழ்ச்சியும், பிப்ரவரி 12-ஆம் தேதி மாலை 4.30 முதல் 7.30 வரை தெப்பத் திருவிழா நிகழ்ச்சியும், பிப்ரவரி 13-ஆம் தேதி மாலை 4.30 மணி முதல் 7.30 மணிக்குள் கொடி இறக்குதல் நிகழ்ச்சியும் நடைபெற உள்ளன.
தைப்பூச தோ்த் திருவிழாவுக்கு அதிக அளவிலான பக்தா்கள் வருவதை கருத்தில் கொண்டு பிப்ரவரி 4 முதல் 8 வரை மற்றும் பிப்ரவரி 13, 14 ஆகிய தேதிகளில் மலைக்கோயிலுக்கு நான்கு சக்கர வாகனங்களில் செல்வதற்கு அனுமதியில்லை. பிப்ரவரி 9 முதல் 12 வரை இரண்டு சக்கரம் மற்றும் நான்கு சக்கர வாகனங்களில் செல்வதற்கு பக்தா்களுக்கு அனுமதியில்லை. மேற்படி நாள்களில் பக்தா்கள் மலைப்படிகள் வழியாகவும், திருக்கோயில் மூலம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள பேருந்துகளில் சென்றும் சுவாமி தரிசனம் செய்யலாம்.
இவ்வாறு அவர் செய்தி குறிப்பு மூலம் தெரிவித்தார்.