சென்னை அண்ணா பல்கலைக்கழக மாணவிக்கு நடைபெற்ற சம்பவத்துக்கு நீதி கேட்டு போராட்டங்கள் நடைபெற்று வருகிறது.
இந்த சம்பவத்தில் சென்னை போலீசார் நடத்திய விசாரணையில் ஞானசேகரன் எனும் நபர் கைது செய்யப்பட்டு விசாரிக்கப்பட்டுவருகிறார். பாதிக்கப்பட்ட பெண்ணை பாலியல் ரீதியாக சீண்டியது ஞானசேகரன் என்பது தெரியவந்துள்ளது.
சம்பவம் நடைபெற்றபோது ஞானசேகரனுக்கு செல்போன் அழைப்பு வந்துள்ளது. அதில் அவர் யாருடனோ சார் என பேசியிருக்கிறார் என மாணவி புகாரில் தெரிவித்துள்ளதாக தகவல் உள்ளது.
இந்நிலையில், ஞானசேகரன் பேசிய அந்த சார் யார்? போலீசார் ஞானசேகரனின் செல்போன் ஏர்ப்லேன் மோட் எனும் அழைப்புகள் வராத நிலையில் இருந்ததாக சொல்லுகின்றனர். ஆனால் அவர் யாருடனோ பேசிக்கொண்டிருந்தார் என மாணவி சொல்கிறார்.
இதுபற்றிய தெளிவு வேண்டும் என அதிமுக பொது செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி அண்மையில் செய்தியாளர்களிடம் பேசுகையில் தெரிவித்தார்.
இந்நிலையில் தமிழகம் முழுவதும் அதிமுக தரப்பில் இந்த பாலியல் சீண்டலை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது. இன்று கோவை மாநகரில் உள்ள பல பகுதிகளில், தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களிலும் அதிமுக சார்பில் 'யார் அந்த சார்?' எனும் போஸ்டர் ஒட்டப்பட்டுள்ளது.
குற்றவாளிகளும் குற்றத்துக்கு ஆதரவாக உள்ள நபர்களும் தப்பக்கூடாது என அதிமுக தரப்பில் முழக்கங்கள் எழுப்பப்பட்டு வருகிறது.