கோவை மாநகராட்சியில் சொத்து வரி 6% உயர்வு கடந்த செவ்வாய்க்கிழமை (1.10.2024) அன்று நடைமுறைக்கு வந்தது. மேலும் ஏப்ரல் முதல் செப்டம்பர் வரை முதல் தவணை சொத்து வரியை செலுத்தாமல் இருந்தால் அதற்கு 1% அபராதம் செலுத்த வேண்டும்.

இந்த அறிவிப்பு பொதுமக்கள் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில், இன்று கோவை மாவட்ட அதிமுக அலுவலகத்தில் நடைபெற்ற ஆலோசனை கூட்டத்தில் கோவை மாநகராட்சி கொண்டுவந்துள்ள சொத்துவரி உயர்வை திரும்ப பெறவேண்டும் என்பதை வலியுறுத்தி, மாநகராட்சி பகுதியில் மட்டுமில்லாமல், நகராட்சி மற்றும் பேரூராட்சி பகுதிகளில் மனித சங்கிலி போராட்டம் நடத்துவது குறித்த ஆலோசிக்கப்பட்டுள்ளது.

இந்த கூட்டத்திற்கு முன்னாள் அதிமுக அமைச்சரும் அதிமுக தலைமை கழக நிலைய செயலாளருமான எஸ்.பி. வேலுமணி தலைமை வகித்தார். மேலும் இந்த கூட்டத்தில் பூத் கமிட்டி அமைப்பது அதிமுக வளர்ச்சி பணிகள் குறித்து பல்வேறு விஷயங்கள் ஆலோசிக்கப்பட்டன.

எஸ்.பி. வேலுமணி செய்தியாளர்களுக்கு பேட்டியளிக்கையில், வருகின்ற 8ம் தேதி மாபெரும் மனித சங்கிலி போராட்டத்தை அதிமுக சார்பில் நடத்தி இருப்பதாகவும் அதனை எப்படி சிறப்பான முறையில் நடத்துவது என்பது குறித்து ஆலோசிக்கப்பட்டதாக தெரிவித்தார். இந்த மனித சங்கிலி போராட்டம் என்பதே அனைவருக்கும் ஆனது எனவே பொதுமக்கள் தொழில்துறையினர் தொழிலாளர்கள் என அனைவரும் இதில் பங்கேற்கலாம் என தெரிவித்தார்.

தொழில்துறையின் நிலைமை குறித்து பேசிய அவர், தமிழகத்தில் குறு-சிறு-நடுத்தர தொழில்கள் தற்போது பாதிக்கப்பட்டுள்ளதாகவும், பீக் ஹவர் கட்டணம் உட்பட மின் கட்டண உயர்வு தொழில்துறையை சிரமத்துக்குள்ளாக்கியுள்ளதாகவும், அதை ரத்து செய்ய வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டார்.