மழைகாலம் வந்தால் கோவை மாநகரில் பல இடங்களில் உள்ள சுரங்கபாதைகளில் நீர் தேங்குவதை காண முடியும். அதில் லங்கா கார்னர் பகுதியில் உள்ள சுரங்க பாதையும் ஒன்று.

அதிக மழை பொழியும் போது இங்கு நீர் பெருமளவு தேங்குவதால் அப்பகுதியில் வாகனங்கள் செல்லமுடியாத நிலை ஏற்படும்.  சில எதிர்பார்க்காத தருணங்களில் வாகனங்கள் இங்கு சிக்கிக்கொள்ளும் சம்பவங்களும் அரங்கேறியுள்ளது. 

எனவே லங்கா கார்னர் வழியே அமைந்துள்ள ரயில்வே சுரங்கப்பாதை பகுதியில் தேங்கும் மழை நீரை வெளியேற்றுவதற்காக அந்த சுரங்கப்பாதையில் இருந்து வாலாங்குளம் வரை கால்வாய் அமைக்கும் பனிகள் இந்தாண்டு ஜூன் மாதம் துவங்கி நடைபெற்று வருகிறது. 

இந்த பனி முடிவடைந்ததும் ரூ.1.5 கோடி மதிப்பில் கிட்டத்தட்ட 1 முதல் 2 லட்சம் லிட்டர் மழை நீரை சேகரிக்க கூடிய  தொட்டியை லங்கா கார்னரில் உள்ள இரண்டு சுரங்கபாதைகளுக்கு மத்தியில் உள்ள பகுதியில் அமைக்க மாநகராட்சி திட்டமிட்டுள்ளது. இதன்மூலம் அங்கு விழும் மழை நீர் தேங்காத படி இந்த தொட்டியில் சேகரிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இன்று லங்கா கார்னர் பகுதியில் கூடுதல் மழைநீர் வடிகால் கட்டும் பணிகள் நடைபெற்றுவருவதை மாநகராட்சி ஆணையாளர் சிவகுரு பிரபாகரன் நேரில் சென்று பார்வையிட்டு, பணியினை விரைவாகவும், தரமாகவும் செய்து முடித்து பயன்பாட்டிற்கு கொண்டுவர சம்மந்தப்பட்ட அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.

மேலும் அப்பகுதியில் மழைநீர் தேங்காமல் இருக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள சம்மந்தப்பட்ட பொறியாளர்களுக்கு உத்தரவிட்டார்.