வடகிழக்கு பருவமழை துவங்கி சில நாட்களே ஆன நிலையில் சென்னையில் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. பருவமழை காலம் அக்டோபர் முதல் டிசம்பர் வரை நீடிக்கும் என்றிருக்க, சென்னை நகரம் இப்போதே மிதக்க துவங்கி உள்ளது. கனமழை காரணமாக சென்னையில் அரசு தனியார் நிறுவனங்களுக்கு நாளை (16.10.2024) விடுமுறை விடப்பட்டுள்ளது.

வருடா வருடம் ஏற்படும் இப்படிப்பட்ட நிகழ்வுகளுக்கு அதிக மழை பெய்வதுதான் காரணமா? பருவநிலை மாற்றம் தான் காரணமா? இவை மட்டும் காரணம் இல்லை. இவையும் ஒரு காரணம்.

கவனிக்க வேண்டியது...

1960களிலிருந்து சென்னையில் நகரமயம் என்பது வேகமாக நடைபெற்று வரும் ஒரு நிகழ்வாக உள்ளது. 1989க்கு முன்பு சென்னையில் அங்கீகரிக்கப்படாமல் இருந்த அனைத்து வீட்டு மனைகளும் தமிழக அரசால் முறைப்படுத்தப்பட்டன என அரசு அறிக்கை ஒன்றில் (CAG 2017) தெரிவிக்கப்பட்டுள்ளது.

1989 மற்றும் 2016 ஆகிய ஆண்டுகளுக்கு இடையில், 197 காலனிகளை 175 ஹெக்டேர் நிலத்தில் கட்டப்பட்டது  என்பதும் இந்த காலனிகள் அமைந்த இடம் 54 நீர்நிலைகளின் பகுதி என்பதும் 2015 வெள்ளத்திற்குப் பிறகு நடைபெற்ற ஒரு CAG தணிக்கை அறிக்கை மூலம் தெரியவந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இவ்வாறு நீர்நிலைகளில் கட்டப்பட்டுள்ள காலனிகளின் எண்ணிக்கை சென்னையில் அதிகமாக இருக்கலாம் என்று அந்த அறிக்கை கூறுகிறது. 2015ல், ஒரு தனி நபர் தாக்கல் செய்த ரிட் மனுவின் அடிப்படையில், சென்னை உயர்நீதிமன்றம், 2015 வெள்ளத்திற்கு பெரிய அளவிலான அங்கீகரிக்கப்படாத லேஅவுட்கள் பங்களித்ததாகக் குறிப்பிட்டது.

கனமழைக் காலங்களில் தண்ணீரை உறிஞ்சி அதை மெதுவாக நீர்நிலைகளுக்குள் வெளியிட கூடிய ஆற்றல் கொண்ட சதுப்பு நிலங்கள் சென்னையின் பல இடங்களில் குறைந்துள்ளது. உதாரணத்திற்கு 1975 ஆம் ஆண்டு  5,000 ஹெக்டேர் அளவுக்கு இருந்த பள்ளிக்கரணை சதுப்பு நிலம் 2016ல் 695 ஆக குறைந்தது என்பது 2017 CAG அறிக்கையில் தெரியவந்தது.

சென்னையின் OMR பகுதியில் ஐ.டி. துறைவளர்ச்சியை அதிகப்படுத்தவேண்டும் என்பதற்காக அந்த பகுதியின் இருபுறம் கட்டுமானங்களை தமிழக அரசு அனுமதித்தது முக்கிய காரணம் என அந்த அறிக்கை தெரிவிக்கிறது. சென்னையின் வேளச்சேரி, மடிப்பாக்கம், பெருங்குடி, பெரும்பாக்கம் பள்ளிக்கரணை போன்ற பகுதிகள் சதுப்பு நில பகுதியிலோ அல்லது அதன் அருகில் தான் கட்டப்பட்டுள்ளது என மற்றொரு தகவல் உள்ளது. 

சென்னை பெருநகர பகுதியின் கீழ் என்பது சென்னை மாவட்டத்துடன் புறநகர்ப் பகுதிகளான காஞ்சிபுரம் , செங்கல்பட்டு , திருவள்ளூர் மற்றும் ராணிப்பேட்டை மாவட்டங்கள், 12 நகராட்சிகள், 13 டவுன் பஞ்சாயத்துகள், 22 பஞ்சாயத்து யூனியன்கள் உள்ளன. 1973 ஆம் ஆண்டில் சென்னை பெருநகர பகுதியில் இருந்த 73,689 ஹெக்டர் விவசாய நிலம் 2006ல் 83% குறைந்தது. தற்போது வெறும் 12,569 ஹெக்டர் விவசாய நிலம் தான் சென்னை பெருநகர பகுதியில் உள்ளது. 2026ல் சென்னை நகரத்திலும் சென்னை பெருநகர பகுதியிலும் விவசாய நிலங்கள் பெருமளவு காணாமல் போக வாய்ப்புள்ளது என தெரியவருகிறது. சரி முன்பு நடந்ததை விடுவோம். கடந்த சில காலத்திலேயே பல ஆயிரம் கோடி ரூபாய் செலவு செய்து மழைநீர் வடிகால்கள் அமைத்தாலும் மழைக்காலத்தில் சென்னை ஸ்தம்பிப்பது குறைந்தபாடில்லை.

இந்த வளர்ச்சியும் வேண்டும்!

நீர்நிலைகளை பறிகொடுத்த பின்னர் கோடிகளை கொட்டினாலும் நிலைமையை நாம் விரும்பும்படி மாற்றுவது என்பது சாத்தியம் இல்லை என்பதை இது உணர்த்துகிறது. ரியல் எஸ்டேட் வளர்ச்சி, தொழில் வளர்ச்சி, ஐ.டி. துறை வளர்ச்சி, பிரபல மால்களின் வரவு, நட்சத்திர விடுதிக்கு இணையாக அடுக்குமாடி குடியிருப்பு திட்டங்கள், உலக தரம் கொண்ட கிரிக்கெட் ஸ்டேடியம், என அடுத்தடுத்து சென்னையை போலவே வளர்ச்சியை நோக்கி கோவை செல்கிறது. 

இந்த வளர்ச்சியை நோக்கி செல்லும் கோவை அதைவிட பல மடங்கு நகரமயமாகி, பெரும் வளர்ச்சி கண்டும் சில நாட்களுக்கு முன்பு தண்ணீர் பற்றாக்குறையை சந்தித்த பெங்களூர், இப்போது தண்ணீரை மட்டுமே சந்திக்கும் சென்னை ஆகிய 2 பெரிய நகரத்திடம் இருந்து பாடம் கற்றுக்கொள்ளவேண்டும்.

வளர்ச்சியை நோக்கிய பயணத்தில், மண், மரங்கள், குளங்களை மறந்துவிடாமல் அதன் வளர்ச்சி மீதும் கோவை கவனம் வைத்தால் தான் எதிர்காலம் அழகாக, அமைதியாக அமையும்.

நீர் நிலைகள் முறையாக பராமரிக்கப்பட வேண்டும். ஆக்கிரமிப்புகள் எங்கும் இருக்கக்கூடாது. கட்டிட கழிவுகள் மற்றும் UGD மூலமாக கழிவு நீர் கோவையின் நீர் நிலைகளில் சேராமல் இருக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். 

கோவையில் உள்ள திட கழிவுகளை கையாள ஒரு சிறப்பு திட்டம் கொண்டுவரவேண்டும். மழைநீர் சேமிப்பு கட்டமைப்பை அனைவருக்கும் (அனைத்து கட்டிடங்களிலும்) கட்டாயம் ஆக்கிட வேண்டும், கோவை மாநகராட்சி எல்லையில் செயலாற்று உள்ள ஆழ்துளை கிணறுகளை நீர் சேமிக்க செய்யக்கூடியதாக மாற்றிட முயற்சிகள் எடுக்கவேண்டும்.  

காலியாக உள்ள அரசு நிலங்கள் சிலவற்றில் சிறு வனங்கள் உருவாக்க முயற்சிகள் எடுக்கவேண்டும். பிளாஸ்டிக் குப்பைகள் உருவாவதை தடுக்க தீவிர நடவடிக்கைகள் கொண்டுவரவேண்டும். அவை திறந்த வெளியில் உள்ள சாக்கடைகளில் சேருவதை தடுக்க வேண்டும். மீண்டும் குப்பை தொட்டிகள் கொண்டுவரப்படவேண்டும் 

முக்கியமாக நொய்யல் நதியின் தென் பகுதியில் இருந்து 22 ஓடைகளும், வடக்கு பகுதியில் இருந்து 12 ஓடைகளும் மூடியுள்ளன. இதில் 2 ஓடைகள் சிறுதுளி அமைப்பு தரப்பில் சீரமைக்கப்பட்டுள்ளது. மீதம் உள்ள 32 ஓடைகள் சீரமைக்கப்படவேண்டும்.

இதெல்லாம் கோவையில் சரியாக நடக்க அரசு, அரசு அதிகாரிகள், தொழில் நிறுவனங்கள், பொது மக்கள் அனைவரின் பங்களிப்பு அவசியம்.