சமீபத்தில் மும்பையில் நடந்து முடிந்த 2025 எல்-அண்டு-டி மும்பை ஓப்பன் டென்னிஸ் போட்டியில் (L&T Mumbai Open 2025) வெற்றி பெற்றது சுவிஸ் நாட்டை சேர்ந்த ஜில் டேய்க்மேனாக இருந்தாலும் டென்னிஸ் உலகையே பிரம்மிப்படையை வைத்தது கோவையை சேர்ந்த 15 வயது சிறுமி மாயா ராஜேஸ்வரன் ரேவதி தான்.

உள்ளூர் முதல் இ.எஸ்.பி.என். வரை மாயா ராஜேஸ்வரன் ரேவதி பற்றி தான் பேச்சு. பின்ன இருக்காதா... வெறும் 15 வயதே ஆன மாயா இந்த 2025 மும்பை ஓப்பன் டென்னிஸ் போட்டிபோட்டியில் கலந்து கொள்வதற்கான தகுதி பெரும் குவாலிபையர் 1 மற்றும் 2 போட்டிகளில் இத்தாலி நாட்டை சேர்ந்த போசா ஹியூர்கோ மற்றும் அமெரிக்காவின் ஜெசிகா பெயிலாவை வீழ்த்தி நுழைந்தார்.

அதற்கடுத்து உலக தரவரிசையில் 353ம் இடத்தில் உள்ள ஜரினா டியாஸ் (கசகஸ்தான்), 225 இடத்தில் உள்ள ஐர்யினா சைமானோவிச் (பெலருஸ்) மற்றும் 285 இடத்தில் உள்ள மே யாமாகுசி (ஜப்பான்) ஆகியோரை தனது சக்திவாய்ந்த சர்வ், மிரட்டலான ரிட்டர்ன் மற்றும் ஆக்ரோஷமான ஷாட் மூலம் வீழ்த்தினார். இதனால் 15 வயது சிறுமி மாயா இந்த மும்பை ஓப்பன் போட்டியின் அரையிறுதிக்கு முன்னேறினார்.

அங்கு சுவிஸ் நாட்டை சேர்ந்த ஜில் டேய்க்மேனிடம் மாயா தோல்வி அடைந்தாலும், இது அவரின் அதிரடி ஆடுகளத்தில் முதல் அத்தியாயமே. இன்னும் நிறைய சாதிக்க இருக்கிறார் மாயா. 

தனக்கு 8 வயது இருக்கும் போது கோவையில் பள்ளியை முடித்துவிட்டு மாலை நேரங்களில் பொழுதுபோக்கிற்காக முதலில் டென்னிஸ் விளையாடத் துவங்கிய மாயாவிற்கு அந்த விளையாட்டின் மீது இருந்த அளவு கடந்த ஆர்வம் அவரை வாழ்வின் வேறு திசையை நோக்கி எடுத்துச் சென்றது. 
முன்னாள் இந்திய டென்னிஸ் வீரரும் தேசிய அளவிலான தரவரிசையில் முதல் இடம் பெற்ற வீரருமான KG ரமேஷிடம் முதலில் மாயா பயிற்சி பெற்று வந்தார். அதற்கடுத்து ப்ரோ சர்வ டென்னிஸ் அகாடமியில் கடந்த ஐந்து ஆண்டுகளாக மனோஜ் குமார் என்பவரிடம் பயிற்சி பெற்று வந்தார் மாயா.

இதற்கு முன்பு பல போட்டிகளில் களமிறங்கி இருந்தாலும், மாயாவின் திறமையை இந்தியா மட்டுமல்லாது மொத்த டென்னிஸ் உலகமே உற்று நோக்கும் வாய்ப்பை இந்த மும்பை ஓப்பன் போட்டி ஏற்படுத்திக் கொடுத்தது.

"மாயா சானியா மிர்சாவை விட மிகப்பெரிய சாதனையாளராக வருவார்" என்று தேசிய டென்னிஸ் சாம்பியன் வைதேகி சவுத்ரி கூறியுள்ளார். 

மாயாவினுடைய நம்பிக்கையும் அவர் வெளிப்படுத்தக்கூடிய ஆற்றலும், வேகமாக பந்தை எதிரே இருப்பவரை நோக்கி திருப்பி அனுப்பக்கூடிய திறன்களைக் கண்டு வியப்பதாக கூறினார். திறமைசாலி ஆன மாயா தன்னுடைய திறமைகளை மென்மேலும் அதிகரித்துக் கொண்டு வருகிறார். இந்திய டென்னிஸ் உலகின் அடுத்த சூப்பர் ஸ்டார் நிச்சயமாக அவர்தான் என்று அவர் கூறினார்.டென்னிஸ் வீரர் ரோஹன் போப்பண்ணாவும் மாயாவை மனதார பாராட்டி உள்ளார். 
செமி பைனலில் அவர் தோல்வி அடைந்திருந்தாலும் உலக அளவில் டென்னிஸ் லெஜெண்ட் என்று கருதப்படும் 22 முறை கிராண்ட்ஸ்லாம் பட்டம் வென்ற ரபேல் நடால் ஸ்பெயினில் நடத்தும் டென்னிஸ் அகாடமியில் ஸ்காலர்ஷிப் உடன் பயிலக் கூடிய வாய்ப்பை மாயா பெற்றுள்ளார்.