மாசடைந்த கோவை உருமாண்டம்பாளையம் குட்டையை மீட்டெடுக்க சிறுதுளி அமைப்பு சார்பில் புது முயற்சி!
- by David
- Feb 13,2025
1.7 கோடி லிட்டர் கொள்ளளவு கொண்ட கோவை உருமாண்டம்பாளையம் குட்டைக்கு தினமும் சுமார் 2000 வீடுகளில் இருந்து சுத்திகரிக்கப்படாத 8 லட்சம் லிட்டர் கழிவு நீர் வந்து சேருகிறது. இந்த நீரில் அதிக அளவு கழிவு பொருட்கள் உள்ளது. இதனால் இந்த குட்டை மிக மிக மோசமான நிலைக்கு சென்றுள்ளது.
இங்கு மாநகராட்சி சார்பில் பாதாள சாக்கடை திட்டம் கொண்டுவரப்படும் என்றாலும் அது நடைபெறும் வரை இந்த குட்டையில் கழிவு இப்படியே இருந்தால், நிலத்தடி நீர் தரம் மாசடைந்து கொண்டே இருக்கும், நல்ல தண்ணீரும் இந்த குட்டையில் தங்காத சூழலே தொடரும்.
எனவே இங்கு ஏற்கனவே சேர்ந்துள்ள பல லட்சம் லிட்டர் கழிவுகள் கலந்த நீரை சுத்திகரிப்பு செய்யவும், இந்த குட்டையை மீட்டெடுக்கவும் கோவை மாநகராட்சியுடன் பசுமை மற்றும் நீர் மேலாண்மை துறை சார்ந்த தன்னார்வ தொண்டு நிறுவனமான 'சிறுதுளி' கை கோர்த்துள்ளது.
என்ன நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது?
முதலில் சிறுதுளி இந்த குட்டையின் மேற்பரப்பு முழுக்க கடினத்தன்மையுடன் பரவியிருந்த திட கழிவுகளை இயந்திரம் மூலம் அகற்றியது. இதனால் குட்டையின் மேலே இருந்த பாசம், செடிகள், பிளாஸ்டிக் உள்ளிட்ட பல குப்பைகள் அகற்றப்பட்டது.
இதை அகற்றிய பின்னர், இந்த மாசடைந்த குட்டை நீரில் மனித கழிவுகளும் அதிக அளவு இருந்துள்ளது என்பதை ஃபீக்கல் கோலிபார்ம் (fecal coliform) எனும் பாக்டீரியா வெளிப்படுத்தியுள்ளது. அதன் அளவு குட்டை நீரில் 75000 முதல் 90000 இருந்துள்ளது. இது மிக மிக மோசமான அளவு ஆகும்.
இப்படிப்பட்ட இந்த நீரை சுத்திகரிப்பு செய்யவும், குட்டைக்குள் வண்டல் மண் போல இருக்கும் கழிவுகளை அகற்றவும் 'நியூ அல்கெ' எனும் தொழில்நுட்ப முறை பயன்படுத்தப்பட்டுள்ளது. அதன்படி சத்துகள் கொண்ட ஒரு வகை திரவம் நீரில் பரவலாக தெளிக்கப்படும்.
வாரம் 1 முறையென்ற கணக்கில் தொடர்ந்து 4 மாதங்களுக்கு தொடர்ச்சியாக தெளிப்பு மூலம் குட்டையில் ஏற்கனவே உள்ள லட்சக்கணக்கான லிட்டர் மாசடைந்த நீர் இதன் மூலம் புத்துயிர் அடையும். மேலும் நீரின் கீழே உள்ள கடினத்தனமையுடன் இருக்கும் கழிவு படலங்களும் இந்த திரவத்தால் தாக்கப்பட்டு மேலே பிரிந்து வந்துவிடும். இதனால் அவற்றை சுலபமாக அகற்றமுடியும் என கூறுகின்றனர் இந்த திட்டத்தை முன்னெடுக்கும் சிறுதுளி அமைப்பினர்.
விளைவுகள் கண்காணிக்கப்படும்!
இவ்வாறு தெளிப்பதற்கு முன்னரே குட்டையில் தண்ணிரின் அளவு எவ்வளவு என்பதையும், குட்டையின் உள்ளே படிந்துள்ள கழிவு/குப்பை படலம் எவ்வளவு என்பதை அறிந்துகொள்ள ஒரு ஆய்வு (BATHYMETRY SURVEY) செய்யப்பட்டுள்ளது.
இந்த குட்டையை புதுப்பிக்கும் திட்டம் 1 ஆண்டு காலம் நடைபெறும். முதல் 4 மாதங்களில் தெளிப்பு நடவடிக்கை எடுக்கப்படும். இந்த முயற்சியின் மூலம் குட்டையில் நிலைமை எப்படி மாறியுள்ளது என்பதை ஒவ்வொரு மாதமும் தர மதிப்பீடு செய்ய திட்டமிடப்பட்டுள்ளது.
அடுத்த 8 மாதங்களில் தினசரி குட்டைக்கு வரும் 8 லட்சம் லிட்டர் நீரை சுத்திகரிக்க பராமரிப்பு நடவடிக்கைகள் நடைபெறும். 3 மாதங்களுக்கு 1 முறை BATHYMETRY என்கிற அந்த ஆய்வும் நடைபெறும்.
வெற்றிபெற்றால்...
இப்படிப்பட்ட நடவடிக்கை மூலம் குட்டையில் உள்ள நீர் மாசு நீங்குவதுடன், குட்டையின் கொள்ளளவு அதிகமாகும். இந்த பனியின் மூலம் குட்டையில் உள்ள தண்ணீர் சுத்திகரிப்பு செய்யப்பட்டு, நீரானது நல்ல நிலைமைக்கு திரும்பும் பட்சத்த்தில் அதற்கு அடுத்ததாக அதை வெளியேற்றி, அதன் கொள்ளளவை அதிகரிக்க தூர் வார முயற்சிகள் எடுக்க திட்டமிடப்பட்டுள்ளது.
நாட்டிலேயே முதல் முறையாக கழிவுகளால் மாசடைந்த குட்டையை இப்படியொரு தொழில்நுட்பத்துடன் புதுப்பிக்கும் முயற்சியை முதலாவதாக முன்னெடுத்துள்ளது கோவை மாநகரின் 'சிறுதுளி' அமைப்பு தான். இதில் வெற்றி பெற்றால், இதை கோவை மாநகரில் உள்ள மாசடைந்த நீர் நிலைகளில் மட்டுமல்லாது நாடு முழுவதும் உள்ள நீர் நிலைகளை மீட்டெடுக்க பயன்படுத்த முடியும்.
சிறுதுளிக்கு கைகொடுக்கும் நிறுவனங்கள்...
இந்த மாபெரும் முயற்சியில், சிறுதுளிக்கு கோவை மாநகராட்சி சார்பில் வழங்கப்படும் உதவி ஒருபக்கம் இருக்க, கோவையை சேர்ந்த பிரபல தனியார் நிறுவனங்களான ஸ்ரீ அன்னபூர்ணா ஹோட்டல்ஸ்; ப்ரீக்காட் (Precot) மற்றும் மேக்னா (Magna) ஆகிய நிறுவனங்கள் சமூக பொறுப்பு நிதி மூலம் உதவிகளை வழங்கி வருவது குறிப்பிடத்தக்கது.