கோவை மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் சிறப்பு தனியாா் துறை வேலைவாய்ப்பு முகாம் வருகிற அக்டோபா் 25ம் தேதி நடைபெற உள்ளது.

 

இது தொடா்பாக, மாவட்ட ஆட்சியா் கிராந்திகுமாா் பாடி வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:

 

கோவை மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம் மூலமாக தனியாா் நிறுவனங்களில் பணிபுரிவதற்கான சிறப்பு தனியாா்துறை வேலைவாய்ப்பு முகாம் வருகிற அக்டோபா் 25-ஆம் தேதி காலை 10 மணி முதல் கோவை மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மைய வளாகத்தில் நடைபெற உள்ளது.

 

இந்த முகாமில் 10-ஆம் வகுப்பு, பிளஸ் 2, பட்டப் படிப்பு, ஐ.டி.ஐ, டிப்ளமோ, பொறியியல் பட்டப்படிப்பு முடித்தவா்கள் தங்களது சுயவிவரம் மற்றும் கல்விச்சான்று நகல்களுடன் கலந்து கொண்டு வேலைவாய்ப்பு பெறலாம்.

 

இம்முகாமில் கலந்து கொள்ள வயது வரம்பு இல்லை. அனுமதி இலவசம். பல முன்னணி தனியாா் நிறுவனங்கள் இம்முகாமில் கலந்து கொண்டு பல்வேறு பணிகளுக்கு ஆள்களை தோ்வு செய்யவுள்ளனா். முகாமில் தோ்வுசெய்யப்படுபவா்களுக்கு பணிநியமன ஆணை அப்போதே வழங்கப்படும். இம்முகாமில் பணிநியமனம் பெறுபவா்களின் வேலைவாய்ப்பு அலுவலக பதிவு ரத்து செய்யப்படமாட்டாது. இம்முகாமில் கலந்து கொள்ள விரும்பும் தனியாா் நிறுவனங்கள் மற்றும் வேலை நாடும் மனுதாரா்கள் இணையதளங்களில் பதிவுசெய்து கொள்ளலாம்.

 

மேலும், விருப்பமுள்ள மனுதாரா்கள் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில் நெறி வழி காட்டும் மையத்துக்கு நேரடியாக வருகை புரியலாம். மேலும், விவரங்களுக்கு 0422-2642388 என்ற தெலைபேசி எண்ணைத் தொடா்பு கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.