கோவை மாவட்டத்தில் விபத்து அடிக்கடி நடக்கும் இடத்தை பிளாக் ஸ்பாட்களாக கண்டறியப்பட்டு அங்கெல்லாம் பேரிகேட் எனும் தடுப்புகள் வைக்க திட்டமிடப்பட்டுள்ளதாக மாவட்ட எஸ்.பி., பத்ரி நாராயணன் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் கூறியதாவது:- கோவை மாவட்ட போலீசாரின் தீவிர நடவடிக்கையால் விபத்துக்கள் வெகுவாக குறைந்து உள்ளது. கடந்த ஆண்டை விட நடப்பாண்டில், 11 சதவீதம் விபத்துகள் குறைந்துள்ளது. விபத்து அடிக்கடி நடக்கும் இடங்கள் பிளாக் ஸ்பாட்களாக கண்டறியப்பட்டுள்ளது.
அவ்வாறு கண்டறியப்பட்ட, 83 இடங்களில் பேரிகேட் வைக்க திட்டமிடப்பட்டுள்ளது. மாவட்டத்தில், 850 பேரிகேட்கள் வைக்க முயற்சி எடுக்கப்பட்டு வருகிறது. சூலுார் பகுதியில் பைபாஸ் ரோட்டை கண்காணிக்கும் வகையில், 300 இடங்களில் சி.சி.டி.வி., கேமிரா அமைக்கப்பட உள்ளது.
பைபாஸ் ரோடு, சிந்தாமணி புதுார், நீலம்பூர் போன்ற முக்கிய பகுதிகளை தீவிரமாக கண்காணிக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது. மதுக்கரை பகுதியில் வாளையார் வரையில் வாகனங்கள் கண்காணிக்கும் பணி நடந்து வருகிறது.
ரோந்து வாகனங்களிலும் விரைவில் கண்காணிப்பு கேமிரா பொருத்தப்பட உள்ளது. மேலும் சூலுாரில் கட்டுபாட்டு அறை அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது. மாவட்டத்தில் திருட்டு, கொள்ளை போன்ற குற்றங்கள் வெகுவாக குறைந்துள்ளது. கடந்த ஆண்டை காட்டிலும் நடப்பாண்டில் அதிகளவு நகை, பணம் மீட்கப்பட்டுள்ளது.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.