கூலி உயர்வு வழங்க வேண்டும் என வலியுறுத்தி கோவை, திருப்பூர் மாவட்டங்களில் கூலிக்கு நெசவு செய்யும் விசைத்தறி உரிமையாளர்கள் பல்லாயிரக்கணக்கானோர் கடந்த மார்ச் 19ம் தேதி முதல் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

ஜவுளி உற்பத்தியாளர்களிடம் கூலி உயர்வை வழங்க கோரிக்கை விடுத்துள்ள அவர்கள், விலைவாசி உயர்வுக்கு ஏற்ற வகையில், கூலி உயர்வு வேண்டுமென வலியுறுத்தி, தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தி வந்தனர். இது தொடர்பாக  ஜவுளி உற்பத்தியாளர்கள், விசைத்தறி உரிமையாளர்கள் மாவட்ட நிர்வாகத்தின் முன்னிலையில் நடத்திய பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டப்படவில்லை.

கடந்த 22 நாட்களாக உற்பத்தியை நிறுத்தப்பட்டு போராட்டம் நடைபெற்றுவரும் நிலையில், இதுவரை ரூ.600 கோடி அளவிலான வர்த்தகம் பாதிக்கப்பட்டு, லட்சக்கணக்கான காடாக்கள் தேக்கமடைந்து இருப்பதாக தகவல் உள்ளது.

இந்த பிரச்சனை பற்றியும் இவர்களின் நிலையை பற்றியும் நேற்று, முன்னாள் முதலமைச்சரும், எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிச்சாமி, விசைத்தறியாளர்கள் வாழ்வாதாரம் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளது என கூறி இந்த விஷயத்தில் தமிழக அரசு தலையிட்டு போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்கவேண்டும் என அரசை வலியுறுத்தினார்.

இந்த நிலையில், தற்போது விசைத்தறி உரிமையாளர்கள் 5 நாட்களுக்கு தொடர் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டிருக்கின்றனர். கோவை மாவட்டம் கருமத்தம்பட்டி சோமனூர் சாலையில் ஆயிரக்கணக்கானோர் இந்த போராட்டத்தில் பங்கேற்றுள்ளனர். தற்போது நடைபெற்றுவரும் இந்த தொடர் உண்ணாவிரத போராட்டம் ஏப்ரல் 15 ஆம் தேதி வரை நடைபெற உள்ளது.