'செல்வ மகள்' திட்டத்தில் சேமிப்புக் கணக்கு துவங்கிய கோவை அரசு பள்ளி குட்டீஸ் !
- by David
- Mar 06,2025
கோயம்புத்தூர் மாநகராட்சி, மசக்காளிபாளையம் நடுநிலைப்பள்ளியில், சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு, 30 பெண் குழந்தைகளுக்கு 'செல்வ மகள்' திட்டத்தின் சேமிப்புக் கணக்கு துவங்கப்பட்டு, பாஸ் புத்தகங்கள் வழங்கப்பட்டன.
குழந்தைகளிடையே சேமிப்புப் பழக்கத்தை ஊக்குவிக்கும் வகையில் இக்குழந்தைகளுக்கு தலா ரூ.250 கட்டணம் செலுத்தி இக்கணக்குகளை கோயம்புத்தூர் ரேஸ் கோர்ஸ் அஞ்சல் நிலைய சப் போஸ்ட் மாஸ்டர்மாலதி துவக்கி வைத்தார்.
நிகழ்ச்சிக்கு கோவை டிவிஷனின் முதுநிலைக் கோட்டக் கண்காணிப்பாளர் ,K. சிவசங்கர் தலைமை வகித்து குழந்தைகளுக்கு 'செல்வ மகள் சேமிப்புக் கணக்கு' பாஸ் புத்த்கங்களை வழங்கி, திட்டத்தின் அருமைகளை விளக்கினார். மாணவர்கள் எவ்வாறு எல்லாம் சேமிப்பை வளர்க்க முடியும் என்று அறிவுரை வழங்கினார்.
பள்ளியின் தலைமை ஆசிரியர் மைதிலி உள்ளிட்ட ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்கள் கலந்து கொண்டனர். பள்ளியில் செல்வ மகள் சேமிப்புத் திட்டம் ஆண்டுதோறும் இவ்வாறு மகளிர் தினத்தை ஒட்டி துவங்கப்பட்டு வருகிறது. தகுதியான அனைத்துப் பெண் குழந்தைகளுக்கும் யாகும் விடுபடாமல் இக்கணக்கு துவங்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.