கோவை ஆத்துப்பால மேம்பாலத்தில் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்த இளைஞரின் கழுத்தில் பட்ட நூல் அறுத்த விவகாரத்தில் 3 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு பின்னர் காவல் நிலைய பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.
கோவை மலுமிச்சம்பட்டியை சேர்ந்த கார்த்திக் கடந்த 7 ஆம் தேதி உக்கடம் ஆத்துப்பாலம் மேம்பாலத்தில் இரு சக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தார். அப்போது பாலத்தில் பறந்து வந்த ஒரு பட்டத்தின் நூல் கார்த்திக்கின் கழுத்தில் சுற்றிக்கொண்டது. நிலை தடுமாறிய அவர் உடனடியாக வாகனத்தை நிறுத்தி பட்ட நூலை எடுக்க முற்பட்டபோது கைகள் மற்றும் கழுத்தில் ரத்த காயத்திற்கு உள்ளானார்.
சிகிச்சை பெற்றுக் கொண்ட கார்த்திக் கடந்த திங்கள்கிழமை மாநகர காவல் ஆணையரிடம் இது தொடர்பாக புகார் அளித்து கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என மனு அளித்திருந்தார். இது தொடர்பாக விசாரணை மேற்கொண்ட காவல்துறையினர் கரும்புக்கடை பகுதியை 3 பேரை கைது செய்தனர்.
அவர்கள் மீது தெரிந்தே மற்றவர்களுக்கு காயம் ஏற்படுத்தும் வகையில் செயல்பட்டது உள்ளிட்ட இரண்டு பிரிவுகளின் கீழ் கரும்பு கடை காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்தனர். கடுமையான எச்சரிக்கைக்கு பிறகு கைது செய்யப்பட்ட மூவரும் காவல் நிலையப் பிணையில் விடுவிக்கப்பட்டனர்.
உக்கடம் மேம்பாலத்தில் பட்டம் விட்டு இளைஞருக்கு காயம் ஏற்படுத்திய விவகாரத்தில் 3 பேர் மீது வழக்கு!
- by CC Web Desk
- Dec 11,2024