பட்ஜெட்ல நிதி ஒதுக்கியாச்சு... எப்போ ஆரம்பிக்கும் கோவை மேற்கு புறவழிச் சாலை திட்டத்தின் 2ம் கட்ட பணிகள்?
- by David
- Mar 24,2025
கோவை மேற்கு புறவழிச் சாலை திட்டத்தின் இரண்டாம் கட்ட பணிகளுக்கு அண்மையில் தாக்கல் செய்யப்பட்ட 2025 தமிழக பட்ஜெட்டில் ரூ. 348 கோடி ஒதுக்கப்பட்டது.
மொத்தம் 32.42 கிலோமீட்டர் தொலைவிற்கு அமையும் கோவை மேற்கு புறவழி சாலை திட்டம் மூன்று கட்டங்களாக முன்னெடுக்கப்படுகிறது. இதில் முதல் கட்ட பணிகள் நிறைவடைந்த பின்னர் மாதம்பட்டி முதல் கணுவாய் வரை 12.10 கிலோ மீட்டர் தூரத்திற்கு இரண்டாம் கட்டப் பணிகள் நடைபெறும்.
இந்த நான்கு வழி சாலையில் முதல் கட்ட பகுதி மதுக்கரையில் துவங்கி மாதம்பட்டி வரை 11.80 கிலோமீட்டர் தூரத்திற்கு அமைகிறது. 2023 ஆகஸ்ட் மாதத்தில் துவங்கிய முதல் கட்ட பணிகள் தற்போது சுமார் 60% நிறைவடைந்துள்ளது. இதை வரும் ஆகஸ்ட் - செப்டம்பர் 2025க்குள் முடிக்க நெடுஞ்சாலைத் துறையினர் திட்டமிட்டுள்ளனர்.
இரண்டாம் கட்ட பணிகளுக்கு தமிழக அரசு நிதி ஒதுக்கியுள்ள நிலையில் துறை ரீதியான நிர்வாக அனுமதி வழங்கப்பட்டது அந்த நிதி விடுவிக்கப்படும். அதன் பின்னர் டெண்டர் கோரப்பட்டு பணிகள் அடுத்த கட்டத்தை நோக்கி நகரும்.
இந்த கட்ட பணிகளுக்கு தேவைப்படும் நிலங்களில் 95 % நிலம் கையகப்படுத்தும் பணிகள் நிறைவு பெற்றுள்ளது. கணுவாய் முதல் நரசிம்மநாயக்கன்பாளையம் வரை (8.52 கி.மீ) மூன்றாம் கட்டப் பணிகளுக்கான நிலம் கையடுத்தும் பணிகள் துவங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.