கோவை இயங்கி வந்த அமெரிக்காவை சேர்ந்த போக்கஸ் எஜுமேட்டிக் (Focus Edumatics) பிரைவேட் லிமிடெட் என்ற நிறுவனத்தால் பாதிக்கப்பட்டுள்ளதாக நேற்று கோவை கலெக்டர் அலுவலகத்தில் ஐ.டி. ஊழியர்கள் பெரும் திரளாக கூடியது அங்கு பரபரப்பை ஏற்படுத்தியது. 

இந்த நிறுவனத்தின் ஊழியர்கள் இங்கிருந்து பிற நாடுகளுக்கு பாடம் கற்பித்து வந்துள்ளனர். திடீரென 25.1.25 அன்று ஈமெயில் மூலம் நிறுவனத்தில் சாதாரண பணியில் இருந்து உயரிய பதவியில் இருந்த ஊழியர்கள் வரை பலரும் நீக்கப்படுவதாக தகவல் கொடுத்துவிட்டு நிறுவனத்தை மூடியதாக அந்நிறுவன ஊழியர்கள் குற்றம் சாட்டி உள்ளனர்.

பாதிக்கப்பட்டவர்கள் தங்களுக்கு நீதி வேண்டும் என கோவை ஆட்சியர் அலுவலகத்தில் மனு ஒன்றை வழங்க நேற்று திரளாக வருகை புரிந்தனர்.

அந்த மனுவில் அந்நிறுவனத்தை அதற்கு பின்னர் தொடர்பு கொள்ள முடியவில்லை எனவும் அவர்கள் கூறியிருந்தனர். இதுபற்றி விசாரிக்க கோவை மாநகர காவல் துறையை கலெக்டர் அறிவுறுத்தி இருந்தார்.

இந்நிலையில் பாதிக்கப்பட்ட பணியாளர்கள் தற்பொழுது சென்ட்ரல் ஆர்.டி.ஓ. அலுவலகம் பின்புறம் உள்ள தொழிலாளர் துறை அலுவலகத்தில் திரண்டுள்ளனர். பாதிக்கப்பட்ட ஊழியர்கள் தங்களுக்கு இம்மாத சம்பளம் மற்றும் பணி நீக்கத்திற்கான விளக்கம் அடங்கிய சான்றிதழ் வேண்டும். இது இருந்தால் தான் அடுத்து வேறு நிறுவனத்தில் பணி புரிய முடியும் என கூறுகின்றனர்.

அப்டேட்: பதிலளித்த நிறுவனம்!

போக்கஸ் எஜுமேட்டிக் பிரைவேட் லிமிடெட் தனது ஊழியர்களுக்கு இமெயில் அனுப்பியுள்ளது. அதில் ஜனவரி மாத ஊதியத்தை வழங்குவதாகவும், பி.எப் தொகையை செலுத்துவதாகவும், 5 ஆண்டுகளுக்கு மேலாக பணியாற்றிய பணியாளர்களுக்கு கிராஜுவிட்டி தொகை விடுவிக்கப்படும் என்றும் அறிவித்துள்ளது.