கோவை ஆர்.எஸ்.புரம் பகுதியில் இயங்கி வந்த போக்கஸ் எஜுமேட்டிக் பிரைவேட் லிமிடெட். என்ற நிறுவனத்தில் கோவையைச் சேர்ந்த மூவாயிரத்திற்கும் மேற்பட்ட ஊழியர்கள், சுங்கம் கிளை, ஆர்.எஸ் புரம் கிளை மற்றும் வீட்டில் இருந்தே பணி செய்யக்கூடிய வகையிலும் பணியாற்றி வருகிறார்கள்.
இவர்களின் பணி என்பது அமெரிக்காவில் உள்ள மாணவர்களுக்கு இணையதளம் மூலம் வகுப்புகள் எடுப்பது. இந்த கம்பெனியில் இரண்டு ஆண்டுகள் முதல் 12 ஆண்டுகள் வரை பணிபுரியும் ஊழியர்களும் உள்ளனர். இந்நிலையில் திடீரென்று 25.1.2025 அன்று ஒரு மின்னஞ்சல் மூலமாக இந்த கம்பெனியில் பணி புரியும் அனைவருக்கும் கம்பெனி மூடப்படுவதாக மின்னஞ்சல் அனுப்பி உள்ளனர். அதற்கான விளக்கம் முழுமையாக வழங்கப்படவில்லை என்றும் கூறப்படுகிறது.
'ஹெச் ஆர் ஒன்' ஆப் மூலமாக பார்க்கும் பொழுது கடந்த மூன்று மாதங்களாக பணி செய்யவில்லை என்று வருகை பதிவேடு இருக்கிறது. ஆனால் கடந்த மூன்று மாதங்களாக ஊழியர்கள் அனைவருக்கும் ஊதியம் வழங்கப்பட்டு இருக்கிறது. ஆனால் எந்தவித முன் அறிவிப்பும் இன்றி நிறுவனத்தை மூடி உள்ளனர்.
இந்த மாதம் பணி புரிந்ததற்கான ஊதியங்கள் எதுவும் தற்போது வரை வழங்கப்படவில்லை. 12 ஆண்டுகளுக்கு மேலாக பணி புரியும் ஊழியர்களுக்கு எந்த ஒரு நன்மையும் வழங்கப்படவில்லை என்று கூறப்படுகிறது. ஊழியர்கள் யாவருக்கும் தொழிலாளர்கள் உரிமையும் வழங்கப்படவில்லை. இதனால் மாவட்ட ஆட்சியர் உடனடியாக இதில் தலையிட்டு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என, ஃபோகஸ் எஜுமேட்டிக்ஸ் நிறுவனத்தைச் சேர்ந்த 200-க்கும் மேற்பட்ட ஊழியர்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு கொடுக்க வந்து உள்ளனர்.
200 க்கும் மேற்பட்டவர்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு கொடுக்க வந்து கோஷங்கள் எழுப்பி போராட்டத்தில் ஈடுபட்டதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டு உள்ளது.
பதறியடித்து கோவை கலெக்டர் அலுவலகம் வந்த 200க்கும் மேற்பட்ட ஐ.டி. ஊழியர்கள்... பரபரப்புக்கு காரணம் என்ன?
- by CC Web Desk
- Jan 27,2025