2025ன் துவக்கத்தில் ஆரம்பமாகும் என எதிர்பார்க்கப்படும் கோவை மெட்ரோ ரயில் திட்டம் குறித்து இன்று கோவை பாராளுமன்ற உறுப்பினர் கணபதி ராஜ்குமார், சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் சித்திக் மற்றும் அந்த நிறுவனத்தின் அதிகாரிகள் உடன் ஆலோசனை நடத்தியுள்ளார்.
இதில், கோவை மாநகராட்சி ஆணையர் சிவகுரு பிரபாகரனும் கலந்துகொண்டுள்ளனர். இதில் இந்த திட்டத்தை செயல்படுத்துவது பற்றியும் என்னென்ன நடவடிக்கைகள் மூலம் வேகமாக அதை நிகழ்த்த முடியும் என்பது பற்றியும் அதன் பல கட்ட கால அளவீடு குறித்தும் ஆலோசித்ததாக கணபதி ராஜ்குமார் தெரிவித்துள்ளார்.
இந்த ஆலோசனையின் போது ஏற்கனவே சத்தி சாலை வழியே அமைந்துள்ள டெக்ஸ்டூல் பாலத்திலிருந்து சூர்யா மருத்துவமனை திருப்பம் வரை இருக்கக்கூடிய சாலையை விரிவாக்க திட்டமிடப்பட்டிருக்கிறது என்பதை கூறி, இப்போது சக்தி சாலையில் மெட்ரோ ரயில் திட்டம் செயல்படுத்தப்பட உள்ளதால் இந்த இரண்டு திட்டங்களுக்கும் ஒரே நேரத்தில் நிலம் கையகப்படுத்தும் பணியை கோவை மாநகராட்சி மேற்கொள்வது பற்றி ஆலோசிக்கப்பட்டு இருக்கிறது.
மேலும் இப்படி ஒரே நேரத்தில் இரண்டு திட்டங்களுக்கும் தேவையான நிலங்களை கையகப்படுத்தி, இரண்டு திட்டங்களுக்கும் ஏற்ப நிலத்தில் உள்ள குடிநீர் குழாய்கள், மின்சார இணைப்புகள் டெலிபோன் வயர்கள், பாதாள சாக்கடை போன்றவற்றை வேறு இடத்திற்கு மாற்றி அமைப்பது மூலம் இரு திட்டங்களும் எந்தவித சிக்கலும் இல்லாமல் செயல்படுத்தப்படும் என்று கருதப்படுகிறது.
அண்மை தகவல் படி, முன்னர் திட்டமிட்டபடி சூர்யா மருத்துவமனை வரை சக்தி சாலை விரிவாக்கம் செய்யப்படுவதாக இருந்தது மாற்றப்பட்டு கூடுதலாக ப்ரோ ஜோன் மால் வரை விரிவாக்கம் செய்யப்படும் என தெரியவருகிறது. சாலைகள் இருபுறமும் மூன்று மீட்டர் அகலப்படுத்தப்படும் என்பதால் போக்குவரத்து நெரிசல் அங்கு வருங்காலத்தில் குறையும் என எதிர்பார்ப்போம்.