தனியார் பள்ளிகளில் நுழைவுதேர்வு வைத்து மாணவர்களை தேர்வு செய்யாமல் எந்த மாணவர்களையும் தங்களிடம்  அனுப்பலாம், அவர்களை அறிவு சார்ந்தவர்களாக மாற்றிக்காட்டுவோம் என்பதை தனியார் பள்ளிகள் இலக்காக எடுத்து செயல்பட முன்வரவேண்டும் என்று தமிழக பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி மாநிலத்தில் உள்ள தனியார் பள்ளிகளை கேட்டுக்கொண்டார்.

தனியார் மெட்ரிக் பள்ளிகளின் குழுமம் சார்பில் சிறந்த தனியார் பள்ளி ஆசிரியர்கள் மற்றும் முதல்வர்களுக்கு விருது வழங்கும் விழா கோவை இந்துஸ்தான் கலை அறிவியல் கல்லூரி அரங்கில் நடைபெற்றது.

இதில் பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி சிறப்பு அழைப்பாளராக பங்கேற்று விருதுகளை வழங்கினார்.தொடர்ந்து  விழாவில் பேசிய அவர், அரசு பள்ளிகளில் சுமார் 60 திட்டங்களை கொண்டு வந்து அந்த 60 திட்டங்களும் வெற்றிகரமாக நடைபெற முழு காரணம் ஆசிரிய பெருமக்கள்தான் என கூறினார்.

ஒவ்வொரு மனிதனுக்கும் ஏணிப்படி ஒரு ஆசிரியர் என்றும் ஆசிரியர் இல்லை என்றால் நமக்கான அங்கீகாரம் சமுதாயத்தில் கிடைக்காது என்றும் கூறினார்.ஆசிரியர் பணி என்பது வாழ்வியல் மற்றும் அறிவுசார்ந்த சமுதாயத்தின் அச்சாணி எனவும் எவ்வளவோ தொழில்நுட்பம் வந்தாலும் ஆசிரியர் மாணவர்கள் முன்பு நின்று பாடம் நடத்தும் உணர்வை வேறு எந்த டெக்னாலாஜியாலும் கொண்டு வர முடியாது எனவும் பெருமிதம் கொண்டார்.

அரசு பள்ளிகளில் கொண்டுவரப்பட்டுள்ள 60 திட்டங்களில் தனியார் பள்ளிகள் எதையெல்லாம் நடைமுறைப்படுத்த முடியுமோ அதையெல்லாம் நடைமுறைப்படுத்துங்கள் எனவும் கேட்டுக்கொண்டார்.

தமிழ் நாட்டில் பள்ளியில் மாணவர்களின் இடைநிற்றல் என்பது குறைந்துள்ளது என ஒன்றிய அரசே நம்மை பாராட்டுகின்றது என்றால் தனியார் பள்ளிகளும் அதற்கு காரணம் என்றார். அரசு பள்ளிகளில் பல லட்சம் மாணவர்கள் படித்தாலும் இன்று தமிழகத்தில் தனியார் பள்ளிகளின் பங்களிப்பை மிக மிக முக்கியமாக பார்ப்பதாக கூறினார்.

அரசு மற்றும்  தனியார் பள்ளிகள் என இருவரும் சேர்ந்து அறிவு சார்ந்த ஒரு சமுதாயத்தை உருவாக்குவோம் எனவும் அமைச்சர்  அன்பில் மகேஷ் தெரிவித்தார்.