கோவை நவஇந்தியாவில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் நாட்டு நலப்பணித்திட்டம் சார்பில் சர்கார் சாமக்குளம் மண்டலத்திற்கு உட்பட்ட அத்திப்பாளையம் ஊராட்சியில் 16.02.2025 முதல் 22.02.2025 வரை சிறப்பு முகாம் நடைபெற்றது.

இம்முகாமில் 7 நாட்களாக பல்வேறு நலத்திட்ட பணிகள் மேற்கொள்ளப்பட்டன. அதன்படி, இரத்த தான விழிப்புணர்வு, டெங்கு விழிப்புணர்வு, போதைப்பொருள் விழிப்புணர்வு,உறுப்புதான விழிப்புணர்வு தெரு நாடகம் மற்றும்பேரணிகள் நடைபெற்றன.தூய்மை இந்தியா திட்டத்தின்கீழ் பள்ளி வளாகம் சீரமைத்தல், கணினி ஆய்வகம் மற்றும் ஊர் நூலகம் சீரமைத்தல், அத்திப்பாளையம் பேருந்து நிறுத்தம், விளையாட்டு மைதானம், அம்மா சிறுவர் பூங்கா போன்ற பகுதிகளில் தூய்மைப் பணிகளை மேற்கொள்ளுதல் போன்ற பணிகள் நடைபெற்றன.

அதேபோன்று, ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை சார்பில் பொதுமக்களுக்கு இலவச இரத்தப் பரிசோதனை, இருதயப் பரிசோதனை, மருத்துவ ஆலோசனை, சர்க்கரை நோய் பரிசோதனை, பிசியோதெரபி பரிசோதனை போன்றவை மேற்கொள்ளப்பட்டன. ஸ்ரீ ராமகிருஷ்ணா பல் மருத்துவமனை சார்பில் இலவச பல் பரிசோதனை நடைபெற்றது. அரவிந்த் கண் மருத்துவமனை சார்பில் கண் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. கால்நடை முகாம் சிறப்பாக நடைபெற்றது.

அத்திப்பாளையம் ஊராட்சி மக்களுக்கான அனைத்துவித நலத்திட்ட உதவிகளும் ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் நாட்டு நலப்பணித்திட்ட மாணவர்கள் மூலம் மிகச் சிறப்பாக மேற்கொள்ளப்பட்டன.

நாட்டு நலப்பணித்திட்டத்தின் சிறப்பு முகாம் நிறைவு விழா 22.02.2025 (சனிக்கிழமை) இன்று காலை 10 மணியளவில் அத்திப்பாளையம் ஊராட்சி ஸ்ரீ வாரி மஹாலில் நடைபெற்றது.

சிறப்பு முகாமின் நிறைவு விழாவிற்கு ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் முதல்வர் மற்றும் செயலர் முனைவர் பி.எல்.சிவக்குமார் தலைமை வகித்தார். பாரதியார் பல்கலைக்கழக நாட்டு நலப்பணித்திட்ட ஒருங்கிணைப்பாளர் முனைவர் ஆர். அண்ணாதுரை, எஸ்.என்.ஆர்.சன்ஸ் அறக்கட்டளையின் முதன்மை செயல் அதிகாரி திரு.சி.வி.ராம்குமார், முதன்மை நிர்வாக அதிகாரி திரு.டி.மகேஷ் குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

நிகழ்வின் சிறப்பு விருந்தினர்களாக, அத்திப்பாளையம் ஊராட்சி, தனி அலுவலர்,டி.தனலட்சுமி, மண்டல துணை வட்டார வளர்ச்சி அலுவலர் விஜயா, செயலர் எம்.லட்சுமி நாராயணன், ஸ்ரீ வாரி மஹால் உரிமையாளர் அரவிந்தன், கோரண்டலார் குலதெய்வ மண்டபம் தலைவர் பி.ரமேஷ்குமார் ஆகியோர் கலந்து கொண்டனர். ஏழு நாட்களாக நடைபெற்ற சிறப்பு முகாம் அறிக்கையை திட்ட அலுவலர் ஆர்.நாகராஜன் வாசித்தார்.

அத்திப்பாளையம் ஊராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் நலத்திட்ட பணிகளை மிகச் சிறப்பாக மேற்கொண்ட ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரி நாட்டு நலப்பணித்திட்ட மாணவர்களைப் பாராட்டி அத்திப்பாளையம் ஊராட்சி, தனி அலுவலர், டி.தனலட்சுமி, அத்திப்பாளையம் ஊராட்சி மற்றும் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி சார்பில் ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை அறிவியல் கல்லூரியின் முதல்வர் மற்றும் செயலர் பி.எல்.சிவக்குமார் அவர்களிடம் பாராட்டுச் சான்றிதழ் வழங்கினார்.

முன்னதாக திட்ட அலுவலர் செ.பிரகதீஸ்வரன் வரவேற்றார். முடிவில் திட்ட அலுவலர் முனைவர் உ.பிரவின்நன்றி கூறினார். நாட்டு நலப்பணித்திட்ட சிறப்பு முகாமை திட்ட அலுவலர்களான செ.பிரகதீஸ்வரன், பேரா.அ.சுபாஷினி, ரா.நாகராஜன், உ.பிரவின், இளைஞர் செஞ்சுருள் சங்க ஒருங்கிணைப்பாளர் ஆ.சஹானா பாத்திமா மற்றும் நாட்டு நலப்பணித்திட்ட மாணவர்கள் மிகச் சிறப்பாக ஏற்பாடு செய்திருந்தனர்.