கோவையில் இப்போது காலை 11 மணி, பகல் 12 மணி ஆனால் கூட ஆங்காங்கே பனி பெய்வது நிற்பதில்லை. குளு குளு கோவை நிலை தொடர்கிறதோ என நினைத்தால் மதியம் நிலவும் வெயில் சமீப நாட்களை விட சற்று அதிகமாக இருப்பதாக தெரிகிறது என வெயிலில் பயணிக்கும் மக்கள் பலரும் கருதுகின்றனர்.
இதுபற்றி கோவையில் வானிலையை ஆய்வு செய்யும் வெதர் மேன் சந்தோஷ் கிருஷ்ணனிடம் கேட்டதற்கு, அவர் கூறியதாவது:-
கோவையில் பிப்ரவரி 10ம் தேதி வரை காலை நேரங்களில் குளிர்ந்த சூழல் இருக்கும். அதற்குப் பின்னர் காலை நேரங்களில் குளிர்ச்சி குறையும். காலையிலும் லேசாக வெப்பத்தை உணரமுடியும்.
கோவை மாவட்டத்தில் கோடை காலம் என்பது மார்ச் மாதங்களில் தான். பிப்ரவரி இறுதியில் வெப்பம் 35° வரை செல்ல வாய்ப்புள்ளது. மார்ச் மாதத்தில் அதிகபட்சம் 36° முதல் 37° வரை செல்லவும், ஏப்ரல் மாதத்தில் 38° முதல் 39° வரை செல்லவும் வாய்ப்புள்ளது என்றார்.
தொடர்ந்து அவர் கூறுகையில், இந்த வருடத்தில் வெப்ப சலன மழை சராசரி அல்லது சராசரிக்கு சற்று அதிகமாக பெய்ய அதிக வாய்ப்புகள் உள்ளது. மார்ச் மாதத்தில் இருந்து கொங்கு மண்டலத்தில் வெப்ப சலன மழை தொடங்கும்.
இதனால் வெயிலின் தாக்கம் போன வருடம் அளவுக்கு கொடூரமாக இருக்காது. ஏப்ரல் இரண்டாம் பாதியில் தென்மேற்கு பருவக்காற்று வலுப்பெற்று கோயம்புத்தூர், திருப்பூர் ஆகிய மாவட்டங்களுக்கு வெப்பத்தில் பிடியிலிருந்து விலக்கு தரும். மே மாதத்தில் நமது கொங்கு மண்டலத்தில் கனமழை எதிர்பார்க்கலாம்.
தென்மேற்கு பருவமழை எப்படி இருக்கும் என்பதை நான் ஏப்ரல் மாதத்தில் அறிவிக்கிறேன். 2025 வறட்சி தரும் வருடமாக இருக்காது. நமது விவசாயிகள் நிம்மதியாக இருக்கலாம்.
இவ்வாறு அவர் கூறினார்.
கோவையில் வெப்பம் இனி எப்படி? 2025ல் கோடையை எப்போது இருந்து எதிர்பாக்கலாம்? வந்தாச்சு வெதர் மேனின் அப்டேட்!
- by David
- Feb 03,2025