2025-26-ம் நிதி ஆண்டுக்கான தமிழக வேளாண் பட்ஜெட்டை, சட்டப்பேரவையில் உழவர் நலன் மற்றும் வேளாண்மை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் இன்று தாக்கல் செய்தார். இதில் பல அறிவிப்புகள் வெளிவந்துள்ளன.

முக்கியமாக சட்டப்பேரவையில் அமைச்சர் பேசுகையில், உழவர்களின் நீர்ப்பாசன வசதியை மேம்படுத்துவதற்காக இதுவரை 23,74,741 இலவச மின் இணைப்புகளுக்கு மும்முனை மின்சாரம் வழங்கப்பட்டுள்ளது என குறிப்பிட்டு 2024-25 நிதியாண்டில் இலவச மின்சார மானியமாக இதுவரை ரூ. 6962.93 கோடி வழங்கப்பட்டுள்ளதாக கூறினார். 2025-26ல் உழவர்களின் இலவச மின் இணைப்புகளுக்கு தேவையான கட்டண தொகையாக சுமார் ரூ. 8,168 கோடி நிதியினை தமிழ்நாடு மின் பகிர்மான கழகத்திற்கு அரசு வழங்கும் என அவர் கூறினார்.

கோவையில் மக்கள் பட்ஜெட் உரையை காண திரை அமைப்பு

நேற்று தமிழக பட்ஜெட் உரையை மக்கள் காண கோவை உள்பட மாநிலத்தின் பல்வேறு இடங்களில் LED திரைகள் அமைக்கப்பட்டது.  அதேபோல இன்றும் பொதுமக்கள் பார்வையிடும் வகையில் காந்திபுரம் பேருந்து நிலையத்தில் மாநகராட்சியின் சார்பில்  நேரலை ஒளிபரப்பு செய்யப்பட்டது.