கோவை காந்திபுரம் பகுதி நஞ்சப்பா சாலை வழியே அமைந்துள்ள கோவை மத்திய சிறை மைதானத்தில் கோவை மாநகராட்சி சார்பில் 165 ஏக்கர் நிலத்தில் உருவாகி வரும் 'செம்மொழி பூங்கா' திட்ட கட்டுமான பணிகள் தற்போது 17% நிறைவடைந்து உள்ளதாக தகவல்கள் கூறுகின்றன.

2010 ஆம் ஆண்டில் அப்போதைய தமிழக முதலமைச்சர் மு.கருணாநிதி அவர்களால் அறிவிக்கப்பட்ட இந்த திட்டம் கடந்த 2023 டிசம்பர் மாதம் வேகமெடுத்தது. கோவைக்கு வருகை தந்த தற்போதைய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இந்த திட்டத்திற்கு அடிக்கல் நாட்டினர்.

165 ஏக்கர் நிலத்தில் அமையும் இந்த பூங்கா மொத்தம் 2 கட்டங்களாக காட்டப்படுகிறது; முதல் கட்டம் - 45 ஏக்கர், இரண்டாம் கட்டம் - 120 ஏக்கர்.

இந்த முதல் கட்டத்தில் 25 ஏக்கருக்கு மகரந்த வனம், நக்ஷத்திர வனம், மூலிகை வனம் என மொத்தம் 23 வித்தியாசமான பூங்காக்கள் இடம்பெறுகின்றன. மீதம் உள்ள 20 ஏக்கர் நிலத்தில் 1000 சதுர அடியில் உலக தரம் கொண்ட பல்நோக்கு மாநாட்டு மையம், திறந்தவெளி அரங்கம், 300 கார்கள் நிறுத்தும் அளவிற்கான பார்க்கிங் வசதி, செயற்கை நீரூற்று என மற்றும் சில கட்டமைப்புகள் உருவாகின்றன.

முதலில் பல அடுக்குகள் கொண்ட கார் பார்க்கிங் வசதியை உருவாக்க திட்டமிட்டிருந்த நிலையில் அதற்கு பதிலாக வழக்கமான வாகன நிறுத்துமிட வடிவில் அமைக்க திட்டமிடப்பட்டு பணிகள் நடைபெறுகின்றன. கூடுதல் கார்கள் நிறுத்த தேவை எழுந்தால் அப்போது மற்றொரு அடுக்கை அமைக்க முடிவுசெய்யப்பட்டுள்ளது.

மாநாட்டு மையம் மற்றும் திறந்தவெளி அரங்க கட்டுமான பணிகள் வேகமாக நடைபெற்றுவருகின்றன. 23 வகை பூங்காக்கள் கட்டுமான பணிகள் நிறைவடையும் போது தயாராக இருக்கவேண்டும் என்பதற்காக அதற்கான மரக்கன்றுகள் வாங்கிட ஆர்டர் செய்யப்பட்டுள்ளது.

கட்டுமான பணிகள் மற்றும் பூங்கா பராமரிப்புக்கு தேவை படும் நீரை உக்கடம் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையத்தில் இருந்து வழங்க ரூ.8 கோடி மதிப்பில் பூங்காவிற்கும் அந்த நிலையத்திற்கும் இடையே குழாய்கள் அமைக்கும் பணியை மாநகராட்சி நிறைவு செய்துள்ளது.

முதல் கட்டப்பணிகள் அனைத்தும் ஆகஸ்ட் - டிசம்பர் ஆகிய காலத்தில் முடித்திட திட்டமிடப்பட்டு வேலைகள் வேகமாக நடந்து வருகிறது குறிப்பிடத்தக்கது. 

Cover Pic : Hindu Tamil